Published : 26 Feb 2020 01:56 PM
Last Updated : 26 Feb 2020 01:56 PM
பல்கலைக்கழகப் பட்டமளிப்பு உடையை இந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றுங்கள் என, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 28-வது பட்டமளிப்பு விழா இன்று (பிப்.26) நடைபெற்றது. குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்று 225 பிஹெச்டி, 40 எம்ஃபில், 202 தங்கப் பதக்கங்கள், 3,614 பட்ட மேற்படிப்பு, 11 ஆயிரத்து 46 பட்டப்படிப்பு, 148 பிஜி டிப்ளமோ மற்றும் 2,820 தொலைக்கல்வி பயின்றோருக்கு பட்டமளித்தார்.
அதற்குப் பிறகு வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
"அனைத்துக் கட்டமைப்புகளும் பல்கலைக்கழகங்களில் உள்ளன. கல்வி, ஆராய்ச்சியில் முழு கவனத்தை மாணவர்கள் செலுத்த வேண்டும். பல்கலைக்கழகத்தில் சமூக பொறுப்புணர்வு திட்டம் முக்கியமானது. வாய்ப்புகளை ஏற்று முன்னேறுங்கள். நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். கல்வியே முதல் நோக்கம். அரசு அறிவிக்கும் திட்டச் செயல்பாடுகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.
பல்கலைக்கழக சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். மரம் நடுதல், நீர்நிலை தூய்மை ஆகிய சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டால் சிறந்த குடிமகனாகலாம். மேலும் சிறந்த பசுமை பகுதியாகவும், நீர் சேகரிப்பாகவும் மாற்றலாம், தற்போதையது போதுமானதல்ல. சோலார் மூலம் மின் உற்பத்தி செய்து வருவாயும் ஈட்டலாம்.
திட்டச் செயல்பாட்டில் முதல் பல்கலைக்கழகமாக இருப்பதை விட சிறந்த பல்கலைக்கழமாக இருப்பதே தேவை.
பல்கலைக்கழகங்கள் சமூகத்திலிருந்து தொடர்பில்லாமல் தனிமைப்பட்டு இருக்கும் அலங்கார டவராக இருக்கக்கூடாது. அறிவை உருவாக்கி, இணைத்து அடுத்த தலைமுறைக்குப் பகிர்வது அவசியம். பல்கலைக்கழகங்கள் அறிவுக் களஞ்சியங்களாக புவியியல் அமைப்பைத் தாண்டி இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் மக்களின் சமூக வாழ்வுடன் இணைந்திருக்க வேண்டும்.
கல்வியானது சமூகத்தில் வேர் போல் இருந்து பூக்களின் நறுமணத்தைப் போன்று அறிவை உலகெங்கும் பரப்ப வேண்டும். அது மக்களுக்கு சக்தியையும் தர வேண்டும். நேரத்தில் பாதியை வகுப்பறையிலும், மீதி நேரத்தில் சமூகத்திலும் இருக்க வேண்டும். கிராம மக்கள் பிரச்சினையைப் புரிந்துகொள்ளுங்கள். விவசாயத்தை அறியுங்கள். நம்மூர் முக்கியப் பணி அது. உள்ளூர் மக்களின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும். பணி வாய்ப்புகளை உருவாக்கும் கல்வி அவசியம்.
பல்கலைக்கழகங்கள் கல்வி, ஆராய்ச்சி மூலம் கல்விப் புரட்சியை முன்னிறுத்த வேண்டும். உலகெங்கும் உள்ள புதிய வாய்ப்புகள் மற்றும் புது முயற்சிகளுக்கான கதவையும், ஜன்னலையும் பல்கலைக்கழகங்கள் திறக்க வேண்டும். உள்ளூர் தேவை அறிதலும் அவசியம்.
பட்டம் பெறுதல் ஒரு படிக்கட்டுதான். தற்போதைய உலகத்தில் மாற்றம் படுவேகமாக நிகழ்கிறது. பணிபுரிதல், வெற்றியின் அளவீடு, இணைந்து பணியாற்றுதல் உள்ளிட்டவை புதிய வழியில் செல்கிறது. தற்போதைய சூழலில் மாற்றத்துக்கு ஏற்ப சரி செய்துகொள்வது அவசியம். புதிய வாய்ப்புகளையும் அதில் இணைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் இலக்கை அடையும் வகையில் உங்கள் பணியை அமைத்துக்கொள்வது அவசியம்.
கற்றல் தொடர் பணி. தொடர்ந்து கற்று உலக நாடுகளுக்குச் சென்று பணிபுரியுங்கள், பொருள் ஈட்டுங்கள். ஆனால், மீண்டும் திரும்பி வந்து தாய்நாட்டுக்குச் சேவை செய்யுங்கள்.
கல்வி புனிதமானது. பணிக்கானது மட்டுமல்ல, அறிவை உருவாக்குவதே முதன்மையானது.
ஆசிரியர்கள் விரிவாக எடுத்துக்கூறி எல்லைகளை நிர்ணயித்து செய்து முடிப்பவரல்ல. குழந்தைகளுக்குக் கல்வியில் உதவி செய்து வழிகாட்டுவதே முக்கியப் பணி. இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும், ஆற்றுப்படுத்துவராகவும், நண்பராகவும் முன்மாதிரியாகவும் இருப்பது அவசியம். குறிப்பாக உணர்வுகளைக் கையாளுதல் மிக முக்கியம். அதுவே நல்ல மனிதராக இருப்பதற்கு அவசியம். பணம் ஈட்டும் அறிவையும் கற்றல் அவசியம். நன்னெறிக் கல்வியின் தேவையும் அதிகரித்துள்ளது.
யுனெஸ்கோ 4 வழிகளை அறிவுறுத்தியுள்ளது. கற்றலை அறிதல், கற்றலைச் செயல்படுத்துதல், கற்றலைக் கொண்டு வாழ்தல் ஆகியவற்றுடன் கற்றலைக் கொண்டு சமூகத்திலுள்ள அனைத்து மக்களுடன் இணைந்து வாழ்தல் மிக முக்கியமானது. இதற்குப் பேராசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. இதன் மூலம் வாழ்வின் தரம் உயரும்.
தாய்மொழிக் கல்வி அவசியம், கூடுதல் மொழிகளைக் கற்றறிவதில் தவறில்லை. இந்தி, ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள். முதல்வர் நாராயணசாமி புகழுக்குக் காரணம் மக்கள் மொழியை அவர் அறிந்ததுதான். இந்தியும் அவருக்குத் தெரியும். எவ்வளவு மொழி கற்றாலும் முதலில் தாய்மொழிதான்.
தண்ணீர் பற்றாக்குறை உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. அதைப் பாதுகாக்கவும், மறு சுழற்சியில் பயன்படுத்துவதும் அவசியம்.
இளையோரிடம் நேர்மறை மனப்பான்மையே தற்போது தேவை. எதிர்மறை எண்ணமல்ல.
நிர்பயா விஷயத்தில் சட்டம் இயற்றுவது போதாது. அரசியல் வலிமையும் தேவை. அதுவும் போதாது. இறுதியில் அதை நடைமுறைப்படுத்துவதும் அவசியம்.
பல்கலைக்கழக மானியக்குழுவானது உயர் கல்வி நிறுவனங்களில் மனித மதிப்பு மற்றும் தொழில் தர்மம் உயர்நிலையில் இருக்க ஐந்து முறைகளை வடிவமைத்துள்ளது. அதன்படி கல்வி கற்றல் முழு வளர்ச்சி மேம்பாடாக இருக்க வேண்டும். தவறு செய்யாத ஆளுமைத் திறன், சிறந்த பல்கலைக்கழக நிர்வாகத் திறன், நல்லது செய்தால் பாராட்டும் திட்டம், பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வி நிறுவனச் சூழல் சரியானதைச் செய்தால் மகிழ்ச்சி தருவதாகவும், தவறானதைச் செய்வோர் ஊக்கம் அடையாமல் இருக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு உடையை இந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றுங்கள். ஆங்கில முறையேயே இன்னும் கடைப்பிடிப்பது ஏன்- கதர், காதி, பட்டு என இந்தியா தொடர்பானதாக இருக்க வேண்டும்".
இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.
இந்நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், எம்.பி.கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீந்த் சிங் வரவேற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT