Published : 26 Feb 2020 12:37 PM
Last Updated : 26 Feb 2020 12:37 PM
சொந்தக் காலில் நிற்கும் விவசாயிகளை ஒருபோதும் ஸ்டாலினால் போராடி வெல்ல முடியாது. பச்சைத் துண்டு போட்ட விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று தஞ்சையில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் இல்லத் திருமண விழா இன்று (பிப்.26) தஞ்சையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்தத் திருமண விழாவில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர். மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன், பாஜகவின் மாநிலச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
பின்னர் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், டெல்டா மாவட்ட பகுதிகளை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு முதல்வருக்கு விவசாயிகளின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், ஒட்டுமொத்த டெல்டா மாவட்ட விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் இந்த ஆட்சி உள்ளது எனவும், தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஒரு விவசாயி முதல்வராக பதவி ஏற்று வெற்றிகரமாக ஆட்சி நடத்தி வருகிறார் எனவும் தெரிவித்தார்.
இதன்பின்னர், ஓ.பன்னிர்செல்வம் பேசுகையில், "தஞ்சை தரணி மீது ஜெயலலிதா எவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருந்தார் என்பது இங்குள்ள விவசாயிகளுக்குத் தெரியும். தஞ்சை மாவட்டம் ஒரு புண்ணிய பூமி. இதற்கு அச்சுறுத்தலாக ஹைட்ரோகார்பன் திட்டம் இருந்தது. மக்களின் பயத்தைப் போக்கவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, முதல்வர் பழனிசாமி பேசுகையில், "வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அப்படியாக மக்களாகிய உங்களால் முதல்வராக இருக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது.
நாள்தோறும் எங்களைப் பற்றி நாங்கள் விளம்பரம் செய்துகொள்ள வேண்டிய தேவையே இல்லை. ஸ்டாலினே விளம்பரம் செய்து கொடுக்கிறார். ஸ்டாலினுக்கு விவசாயி என்றாலே என்ன எரிச்சல் என்று தெரியவில்லை. நான் விவசாயி என்று சொன்னால், நீ விவசாயி இல்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். ஏன், என்ன கோபம் என்று தெரியவில்லை.
நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன், அப்போது விவசாயி என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால் ஸ்டாலினுக்கு அது பிடிக்கவில்லை. விவசாயி என்றாலே ஒரு பெருமையான விஷயம். அடுத்தவரிடம் கையேந்தாதவர்கள் விவசாயிகள். மற்றவர்களெல்லாம் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டும். விவசாயிகள் மட்டும்தான் சொந்தக் காலில் நிற்பார்கள். அடுத்தவரிடம் கையேந்தாத கூட்டம்.
சொந்தக் காலில் நிற்கும் விவசாயிகளை எதிர்த்துப் போராடி ஸ்டாலினால் வெல்ல முடியாது. இரவு - பகல் பாராமல், மழை - வெயில் என பாராமல் உழைப்பவர்கள் விவசாயிகள். அவர்களை ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம். பச்சைத் துண்டு போட்டவர்களெல்லாம் விவசாயி இல்லை என ஸ்டாலின் சொல்கிறார். பச்சைத் துண்டு போடுவதற்கும் விவசாயி என்கிற தகுதி வேண்டும்" என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT