Published : 26 Feb 2020 11:52 AM
Last Updated : 26 Feb 2020 11:52 AM
மதுரை ரயில் நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களைத் தடுக்க கூடுதல் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்திலுள்ள முக்கிய ரயில் நிலையங்களில் மதுரையும் ஒன்று. இங்கு, சுற்றுலா பயணிகள் உட்பட தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
சமீபத்தில் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட இந்த ரயில் நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் குற்றச்செயல்களைத் தடுக்க, காவல்துறையினர் தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ரயில்வே இருப்புப் பாதை போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இருப்பினும், நடைமேடைகள், நுழைவு வாயில்கள் உள்ளிட்ட சுமார் 60 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன், மானாமதுரை ரயில் நிலையத்தில் நடைமேடையில் இருந்த கடை ஒன்று உடைக்கப்பட்டு, பொருட்கள் கொள்ளை போயின. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை, நிலைய வளாகத்தில் செயல்படும் தனியார் கடைகளுக்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவேண்டும் என, உரிமையாளர்களுக்கு ரயில்வே துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, மதுரை ரயில் நிலையத்திலுள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. தவிர, கூடுதல் கேமராக்கள் பொருத்தவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலைய போலீஸார் கூறுகையில், "மதுரை ரயில் நிலைய வளாகம் மற்றும் நடைமேடைகளுக்கு வரும் ரயில்களில் குற்றச் செயல்களைத் தடுக்க, தீவிர கண்காணிப்பு உள்ளது.
ஏற்கெனவே 60 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய நிலையில், கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட இடங்களிலும் கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடிதம் ஒன்றும் ரயில்வே டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம். விரைவில் 50 கேமராக்கள் பொருத்தப்படும். தனியார் கடைகளில் கேமராக்கள் பொருத்துவதால் அவர்களுக்கு பாதுகாப்பு இருப்பதுடன் திருட்டுச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்கவும், தவறு செய்வோரை கண்காணிக்கவும் முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT