Published : 26 Feb 2020 07:10 AM
Last Updated : 26 Feb 2020 07:10 AM
ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற டிடிவி.தினகரன், அத் தொகுதி பக்கமேவரவில்லை என்று ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அதிமுகசார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்டம்சார்பில் ஆர்.கே.நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகுத்துத் தந்த பாதையில், இன்றும் அதிமுக, தடம் புரளாமல் சென்று கொண்டிருக்கிறது. குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு உறுதியான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அவர் அறிவித்தார். தமிழகத்தில் 15 லட்சம் குடிசைகள் இருப்பது கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு படிப்படியாக வீடுகட்டும் திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், பசுமை வீடுகள், தாமாகவே வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின் மூலம் வீடுகள் என இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2023-ம்ஆண்டுக்குள் அனைத்து குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கும் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படுவது உறுதி.
திருமண நிதி உதவியுடன் 4 கிராம் தங்கத்தை 8 கிராமாக உயர்த்தித் தருவதாகஜெயலலிதா அறிவித்தார். தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. பேறுகால உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். தற்போது உயர்த்தி வழங்கி வருகிறோம்.
அவர் பொங்கல் பரிசு வழங்கினார். நாங்கள் பொங்கல் பரிசுடன் ரூ.1000 சேர்த்து வழங்கி வருகிறோம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானியவிலையில் இருசக்கர வாகனத்தை வழங்கியுள்ளோம். அனைத்து துறைகளிலும் குறிப்பாக தொழில்துறையில் சிறப்பான முன்னேற்றம் பெற்றுள்ளோம்.
கடந்த 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்துக்கு எந்த ஒரு தொலைநோக்குத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. ஜீவாதார உரிமையான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஸ்டாலின் பொய் பேசிநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். எப்படியாவது முதல்வராக வேண்டும் என்று தற்போது கனவுக்கோட்டை கட்டி வருகிறார். ஆனால் மக்கள் ஏமாறமாட்டார்கள்.
ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி.தினகரன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதோடு சரி, தொகுதிப் பக்கமே வரவில்லை. வரும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், அதிமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT