Published : 25 Feb 2020 07:27 PM
Last Updated : 25 Feb 2020 07:27 PM

ராணுவத்தில் சேர வேண்டுமா?-திருவண்ணாமலையில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்

இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவதற்கான ஆட்சேர்ப்பு முகாம், திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டரங்கில், 2020 ஏப்ரல் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து ராணுவ ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்ட தகவல்:

“சென்னையில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்புக்கான தலைமை அலுவலகம் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வில், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம்.

கீழ்க்காணும் பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது

* சிப்பாய் தொழில்நுட்பம்

* சிப்பாய் செவிலியர் உதவியாளர் / சிப்பாய் கால்நடை செவிலியர் உதவியாளர்

* சிப்பாய் எழுத்தர்

* பண்டக காப்பாளர் தொழில்நுட்பம்

* சிப்பாய் பொதுப் பிரிவுப் பணி மற்றும் சிப்பாய் டிரேட்ஸ்மேன்

ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது விண்ணப்பங்களை இணையதளம் மூலம் www.joinindianarmy.nic.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் பதிவு 01, மார்ச் 2020 தொடங்கி 31 மார்ச், 2020-ல் நிறைவடையும். தேர்வுக்கான அனுமதிச் சீட்டு 31 மார்ச், 2020-க்குப் பிறகு இணையதளம் மூலம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் எந்தத் தேதியில் ஆட்தேர்வுக்கு வரவேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் தேர்வு அனுமதிச் சீட்டில் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதிச் சீட்டினை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்திலிருந்து 31 மார்ச், 2020-க்குப் பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆட்சேர்ப்புப் பணி முழுவதும் இணையதளம் மூலம், நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. கடின உழைப்பு மற்றும் தகுதியின் மூலம் மட்டுமே ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்கள், வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றும் மோசடிப் பேர்வழிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்”.

இவ்வாறு ராணுவ ஆட்சேர்ப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x