Published : 25 Feb 2020 06:40 PM
Last Updated : 25 Feb 2020 06:40 PM
டெல்லி மாநிலத் தேர்தலில் தொடங்கி, சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தி வரும் வெறுப்பூட்டும், பகைமைப் பிரச்சாரத்தின் விளைவாக விரும்பத்தகாக சம்பவங்கள் நடக்கின்றன. டெல்லியில் நடைபெறும் வன்முறைக்கு பாஜகவே பொறுப்பு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
“பாஜக-ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும், மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக மக்களவை உறுப்பினர்களும் டெல்லி மாநிலத் தேர்தலில் தொடங்கி, சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தி வரும் வெறுப்பூட்டும், பகைமைப் பிரச்சாரத்தின் விளைவாகவும், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற மக்களைப் பிளவுபடுத்தும் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளும் விலை மதிக்க முடியாத 5 மனித உயிர்களைப் பலிவாங்கியுள்ளது.
ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக வடகிழக்கு டெல்லியில், ஜாபர்பாத், முஜ்பூர் மற்றும் பாஜன்புரா போன்ற பகுதிகளில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் மீது நேற்று (24.02.2020) சங் பரிவார் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தி கலவரத்தை உருவாக்கியுள்ளது. இதனால் பொதுமக்களில் 4 பேரும், காவல்துறையின் தலைமைக் காவலர் ஒருவரும் மரணமடைந்துள்ளனர். இந்தக் கொடுங்குற்றச் செயலுக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளே பொறுப்பாகும்.
அமெரிக்க அரசின் தலைவர் இந்திய நாட்டிற்கு வந்த நேரத்தில் டெல்லி வந்து இறங்கிய நேரத்தில் இந்தத் தாக்குதல் ஆர்எஸ்எஸ்-பாஜக குண்டர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கொடும் குற்றச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது”.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT