Published : 25 Feb 2020 04:16 PM
Last Updated : 25 Feb 2020 04:16 PM
பல அவமானங்களைச் சந்தித்துதான் முதன்மைச் செயலாளர் என்ற நிலைக்கு வந்துள்ளதாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று (பிப்.25) கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்டச் செயலாளர் தியாகராஜன், தெற்கு மாவட்டச் செயலாளர் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலங்களில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பேசிய கே.என்.நேரு, "1993-ல் வைகோ திமுகவில் இருந்து விலகியபோது, திருச்சி மாவட்டப் பொறுப்பாளராக கலைஞர் என்னை நியமித்தார். மேடையில் அமர்ந்திருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நிறைய அவமானங்களை நான் சந்தித்திருக்கிறேன். நிறைய இடங்களில் அவமானப்பட்டிருக்கிறேன். ஆனால், எதையும் நான் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. எவர் மீதும் நான் வருத்தப்பட்டதும் இல்லை. அதனால்தான் இந்த நிலைக்கு வந்தேன்.
மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் எல்லாம் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள். சிறுபான்மை மக்கள், ஆதிதிராவிட மக்கள் ஆகியோருடன் உங்கள் உறவு பலமாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஏற்றுக்கொண்ட பொறுப்பில் வெற்றி பெற முடியும்" எனப் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT