Published : 25 Feb 2020 02:26 PM
Last Updated : 25 Feb 2020 02:26 PM

'இந்தியன் -2' விபத்து: படப்பிடிப்புத் தளத்தில் நீங்கள் எடுக்கும் ஆக்கபூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகள் எங்கள் தன்னம்பிக்கையை மீட்கும்: லைகாவுக்கு கமல் கடிதம்

'இந்தியன் - 2' விபத்தை அடுத்து படப்பிடிப்புக் குழுவினருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை செலவு, அவர்கள் குடும்பத்திற்கு அளிக்க வேண்டிய பொருளாதார உதவி உள்ளிட்டவை குறித்து லைகா நிறுவனர் சுபாஸ்கரனுக்கு கமல் நீண்ட கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 19-ம் தேதி பூந்தமல்லி ஈவிபி மைதானத்தில் 'இந்தியன்-2' படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து கமலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடனடியாக உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீட்டை கமல் வழங்கினார்.

இந்நிலையில் படப்பிடிப்பில் குழுவினர் பாதுகாப்பு, அவர்கள் மனநிலை, தயாரிப்பு நிறுவனம் வழங்கவேண்டிய பாதுகாப்பு, குடும்பத்தினருக்கான உதவி உள்ளிட்டவை குறித்து கமல் ஒரு கடிதத்தை லைகா நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார்.

அதில் கமல் குறிப்பிட்டுள்ளதாவது:

“மிகுந்த வேதனையுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பிப்.19 அன்று நடந்த அந்த நிகழ்வு, நம்முடன் சாப்பிட்டபடி, பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் பணியாற்றிய அவர்கள் மகிழ்ச்சி நீடித்திருக்கப் போவதில்லை என்பதும் அவர்கள் திரும்ப வரப்போவதில்லை என்கிற யதார்த்தத்தை உணரும்போதும் மிகுந்த வேதனையாக இருக்கிறது.

அந்த விபத்து நடந்தபோது சில மீட்டர் தூரத்தில் சில நொடிகளில் அந்தக் கோர விபத்திலிருந்து நான் தப்பித்தேன். அந்தச் சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் படப்பிடிப்பில் கலந்துகொள்கின்றனர். நமது தலையாயக் கடமை விபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான். இதுபோன்ற விபத்துகள் தயாரிப்புக் குழுவிலுள்ள குழுவினரின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் குலைத்துவிடும்.

இனிவரும் காலங்களில் கலைஞர்கள், படக்குழுவினர், டெக்னீஷியன்கள் ஆகியோரின் பாதுகாப்பு முக்கியம். அவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும், அவர்களுக்கான காப்பீடு போன்றவற்றையும் செய்வது சரியானது என்று நினைக்கிறேன். ஏதாவது இழப்பு, பொருளிழப்பு, சேதம் போன்றவை ஏற்பட்டால் தயாரிப்பு நிர்வாகம் அவர்களுக்கான இழப்பீட்டை விரைவாக வழங்கிட வேண்டும்.

தயாரிப்பு நிறுவனமான நீங்கள் இதுபோன்ற விபத்துகளில் சிக்கியவர்களுக்கு, அவர்களுக்கான சிகிச்சை நேரத்தில் பாதிக்கக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைக்கான செலவும், அவர்கள் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியான ஆதரவையும் அளித்திட வேண்டும்.

இனி வரும் காலங்களில் படப்பிடிப்புத் தளங்களில் பாதுகாப்புக்கான அனைத்து உத்தரவாதங்களையும், வழிகாட்டுதல்களையும் நீங்கள் கடைப்பிடிக்கவேண்டும். நீங்கள் எடுக்கப்போகும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அதை விடாமல் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக கடைப்பிடிப்பதும் படப்பிடிப்புக் குழுவினரின் (என்னையும் சேர்த்து) இழந்த தன்னம்பிக்கையை மீட்டெடுத்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க வைக்கும்”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x