Published : 25 Feb 2020 12:13 PM
Last Updated : 25 Feb 2020 12:13 PM
குருபரப்பள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை உடனடியாக கைவிடக் கோரி 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் குருபரப்பள்ளி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 250 ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக, விளைநிலங்களில் மாமரம், தென்னை மரம், தேக்கு மரம் உள்ளிட்ட நீண்ட காலப் பயிர்களை நடவு செய்து 150 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று தலைமுறைகள் கடந்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு டெல்டா என்கிற வெளிநாட்டு நிறுவனத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்திற்கு கூடுதலாக நிலம் தேவைப்படுவதாகக் கூறி, கிராம மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த சிப்காட் மூலமாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், கூடுதலாக நிலம் தேவைப்பட்டால் குருபரப்பள்ளி சுற்றுவட்டாரத்தில் குடியிருக்கும் வீடுகளை இடித்தும், குடியிருந்து வரும் மக்களை வெளியேற்றவும் திட்டம் உள்ளதாகக் கூறி, குருபரப்பள்ளி, பி.குருபரப்பள்ளி, கக்கன்புரம், விநாயகபுரம், மணியாண்டஹாள்ளி, போடறபள்ளி, புளியன்சேரி உள்ளிட்ட 8 கிராம மக்கள் அந்த நிறுவனத்திற்கு எதிராக, இன்று (பிப்.25) காலை 10 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தொடர் போராட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT