Published : 25 Feb 2020 11:48 AM
Last Updated : 25 Feb 2020 11:48 AM

ஒரு ஊழல்வாதி தன்னை விவசாயி எனக் கூறுவதை விவசாயிகள் யாரும் விரும்பவில்லை: முதல்வர் மீது கே.என்.நேரு விமர்சனம்

கே.என்.நேரு - முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

ஒரு ஊழல்வாதி, தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்வதை தமிழ்நாட்டு விவசாயிகள் யாரும் விரும்பவில்லை என, திமுக முதன்மைச் செயலாளரும் அக்கட்சி எம்எல்ஏவுமான கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, கே.என்.நேரு இன்று (பிப்.25) வெளியிட்ட அறிக்கையில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஊழல்களை, லஞ்ச லாவண்யத்தை, கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காக 'நானும் ஒரு விவசாயி' என்று தினமும் புலம்பி வருகிறார். பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு நடிக்கிறார். தமிழ்நாட்டு விவசாயத்தைச் சிதைக்கும் ஏராளமான திட்டங்களுக்கு பச்சைக் கொடி காட்டி வரவேற்பு கொடுத்து வந்த பழனிசாமி, பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு தன்னை விவசாயியாக காட்டிக்கொள்வது பச்சைத் துரோகம் என்று மதுரையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

'நானும் ஒரு விவசாயி'தான் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக்கொள்வதை விமர்சித்த திமுக தலைவர், அண்ணா தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசியதைக் குறிப்பிட்டார்.

'எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொல்லிக்கொள்வதைப் போல நானும் விவசாயி தான் என்று சொல்லிக்கொள்ளக் கூடாது. விவசாயி என்றால் நகத்தில் மண் இருக்க வேண்டும்' என்று அண்ணா சொன்னதைக் குறிப்பிட்டார். உடனே பழனிசாமிக்கு கோபம் வந்துவிட்டது. சேலத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசியவர் ''மு.க.ஸ்டாலின் விவசாயிகளை கொச்சைப்படுத்திவிட்டார்'' என்று பேசி இருக்கிறார். திமுக தலைவர், விவசாயிகளைக் கொச்சைப்படுத்திப் பேசவில்லை. நானும் விவசாயிதான் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்வதன் மூலமாக விவசாயிகளை அவர் கொச்சைப்படுத்தக் கூடாது என்பது தான் திமுக தலைவரின் குற்றச்சாட்டு.

'இது மம்பட்டி பிடித்த கை, ஏரோட்டிய கை, சேற்றில் மிதித்த கால்' என்று 'நானும் ரவுடி தான்' பாணியில் சேலத்தில் பேசி இருக்கிறார் பழனிசாமி. நானும் விவசாயிதான் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் அவரது ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் அடைந்த நன்மை என்ன? அவர் விவசாயிகளுக்காக என்ன செய்தார்?

ஹைட்ரோகார்பன் திட்டத்தில் செய்திருக்கும் துரோகம் போதாதா? கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறைவேற்றக்கூடாது என்றும், தமிழ் நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்றும் மக்கள் கோரி வந்தனர்.

அப்போதெல்லாம் போராடியவர்களைக் கைது செய்து 'நான் ஒரு கார்ப்பரேட்' என்று காட்டி வந்தவர் எடப்பாடி பழனிசாமி. நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு மக்களை ஏமாற்றுவதற்காக வேளாண் மண்டலம் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பும் மக்களை ஏமாற்றும் அறிவிப்பு தான் என்று மறுநாளே தெரிந்துவிட்டது.

ஏற்கெனவே இருந்த திட்டங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் 'வேளாண் மண்டலம்' என்று சொல்வது விவசாயிகளை ஏய்க்கும் மாய்மாலம். ஏற்கெனவே இருக்கும் திட்டங்களை தொல்லைகள் இல்லாமல் நிறைவேற்றுவதற்காக இப்படி ஒரு பசப்புக் காரியத்தை மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து செய்துள்ளது.

அதனால் தான், 'நாளை முதல் மதுவிலக்கு அமலாகிறது, ஆனால் இப்போது இருக்கும் கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்று சொல்வது எத்தனை அயோக்கியத்தனமோ அத்தகைய அயோக்கியத்தனம் இது' என்று மதுரைக் கூட்டத்தில் திமுக தலைவர் குற்றம்சாட்டினார். யோக்கியராக இருந்தால் எடப்பாடி பழனிசாமி இதற்கு பதில் சொல்லி இருக்க வேண்டும்!

"கடந்த சில ஆண்டுகளில் வேளாண்மை சாராத நடவடிக்கைகளால் வேளாண்மையை எதிர்விளைவாக பாதித்து மாநில உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிட்டது" என்று எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த சட்டத்தில் இருக்கிறது. இது உண்மையானால் இப்போது நடைமுறையில் இருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் பாதிப்பு ஏற்பட்டதால்தான் இந்த சட்டமே கொண்டு வரப்படுகிறதென்றால் அந்த ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுவதை அனுமதிப்பது இந்த சட்டத்திற்கே புறம்பானது ஆகாதா? இதற்கு முதல்வர் பதில் சொல்லி இருக்க வேண்டும்.

ஏற்கெனவே இருக்கும் கிணறுகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றால், வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்கிற வார்த்தையே அர்த்தமற்றதாகிவிடும். இதற்கு முதல்வர் பதில் சொல்லி இருக்க வேண்டும்.

உலகிலுள்ள அற்புதமான வெகு சில சமவெளிப்பகுதிகளில் காவிரி டெல்டாவும் ஒன்று. அதனைக் காப்பாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கு முதல்வர் பதில் சொல்லி இருக்க வேண்டும்.

காவிரி படுகை பாதுகாப்புக் கூட்டியக்கம் சார்பில் மார்ச் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களில் அமலில் இருக்கும் ஹட்ரோகார்பன் திட்டங்களை வெளியேற்றாமல் வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது பயன் தராது என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதற்கு முதல்வர் பதில் சொல்லி இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல முதல்வர் இதனை அறிவித்த போது வரவேற்ற அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும்; தற்போது சட்டம் கொண்டு வந்த பிறகு எதிர்க்கிறார்கள் என்றால், இதற்கெல்லாம் எந்த பதிலும் சொல்லாமல், 'நானும் விவசாயி' என்று தேய்ந்த ரெக்கார்டு போல பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இவர் ஏர் பிடித்ததால், மம்வெட்டி பிடித்ததால் இந்த நாட்டு விவசாயிகள் அடைந்த லாபம் என்ன? 'மண்புழுவாக' ஊர்ந்ததால் அடித்துக் குவிக்கும் கோடிகளால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு என்ன லாபம்?

உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் வரை சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி வெயிலிலும் மழையிலும் உழைக்கும் விவசாயிகளுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்.

எட்டு வழிச் சாலைக்காக விவசாயிகளின் விளை நிலங்களை பறித்து, சேலத்தில் விவசாயிகள் மீது தடியடி நடத்தி, இரவோடு இரவாக பிடித்துச் சிறையில் தள்ளியது யார்?

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதித்து, காவிரி டெல்டாவை பாலைவனமாக்க மத்திய பாஜக அரசுடன் துணை நின்று, இப்போது விவசாயிகளை ஏமாற்ற 'பல் இல்லாத ஒரு சட்டத்தை' கொண்டு வந்து நாடகம் போடுவது யார்?

தங்கள் மண்ணை காப்பாற்ற போராடிய விவசாயிகள் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது, தடியடி நடத்தியது எல்லாம் யார்? விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்களை அமைத்து, விவசாயிகளின் வேளாண் நிலத்தை சிதைத்து சின்னாபின்னப்படுத்தியது யார்?

எல்லாமே சாட்சாத் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். மண் வெட்டியைப் பிடித்து விவசாயிகளின் வாழ்க்கையைத் தான் வெட்டினார். குடிமராமத்து பணி உள்ளிட்ட அனைத்திலும் ஊழல் செய்வதற்கு கையெழுத்துப் போட்டதால் அவரது கையில் ஊழல் கறை தான் இருக்கிறதே தவிர, நிலத்து மண் இல்லை.

அவரது கால் கழனிகளில் உள்ள சேற்றில் படவில்லை. ஊழல் சேற்றில் மூழ்கி கிடக்கிறது. அதுவும் எடுக்க முடியாத அளவுக்கு புதையுண்டு போய்க்கொண்டு இருக்கிறது. அதில் இருந்து தப்பிப்பதற்காக 'நானும் விவசாயி' என்று வேஷம் போட்டுக்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்.

தன்னை இவர் விவசாயி என்று சொல்லிக் கொள்வதன் மூலமாக உண்மையான விவசாயிகள் தலைகவிழ்கிறார்கள். ஒரு ஊழல்வாதி, தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்வதை தமிழ்நாட்டு விவசாயிகள் விரும்பவில்லை. ஏற்கெனவே விவசாயிகளின் வாழ்க்கை நொந்து நூலாகிக் கொண்டிருக்கிறது. அதில் இவரது பேச்சு மட்டுமல்ல, விவசாயி வேஷமும் அருவருப்பாக இருக்கிறது. இந்த கபட வேடங்களை விட்டுவிடுங்கள்" என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x