

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி, பெண் குழந்தை முன்னேற்றத்துக்கான தமிழக அரசின்விருதை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி ச.பவதாரணிக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
சட்டப்பேரவையில் கடந்த 19-ம்தேதி விதி 110-ன் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி, ‘‘பெண் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி, ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்’ ஆக அனுசரிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
அதன்படி, ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளான நேற்று, தமிழக அரசின் சார்பில் ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்’ கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண்குழந்தை தொழிலாளர் முறையைஒழிக்கவும், குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல்புரிந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு ஆண்டுதோறும் ‘பெண் குழந்தை முன்னேற்றத்துக்கான மாநில விருது’ வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டுக்கான பெண் குழந்தை முன்னேற்றத்துக்கான மாநில விருதை, கடலூர் மாவட்டம் மாலுமியர்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி ச.பவதாரணிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார். போஷன் அபியான் திட்டம், நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல், வாக்களிக்க மக்களைஊக்குவித்தல், கண் தானம்போன்ற பல்வேறு விழிப்புணர்வுபிரச்சாரங்களை மேற்கொண்டதற்காக பவதாரணிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டு பத்திரத்தைக் கொண்டது.
மேலும், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் புதிதாக இணைந்துள்ள 14 பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் அவர்களின் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வைப்பீட்டுத் தொகை செய்யப்பட்டதற்கான பத்திரங்களை முதல்வர் வழங்கினார்.
அத்துடன் முதல் வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து தற்போது 18 வயது பூர்த்தியடைந்த 7 பெண்களுக்கு முதிர்வுத் தொகைக்கான காசோலைகளையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஜெயலலிதா பிறந்த நாளின்போது, தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சித் துறை சார்பில்லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. சென்னை தலைமைச் செயலகம் எதிரில் உள்ளபூங்காவில் மகிழம் மரக்கன்றை நட்டு, இத்திட்டத்தை முதல்வர்பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.
இந்த ஆண்டு டிசம்பருக்குள் 72 லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்படும். வனப்பகுதிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்கள், சாலையோரங்கள், பூங்காக்கள், பெரிய அளவிலான குடியிருப்புகள் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து பாதுகாக்கப்படும்.
தமிழகத்தின் பருவநிலை மற்றும் மண் வளத்துக்கு ஏற்ற வாறு ஆல், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, வி.சரோஜா உள் ளிட்ட அமைச்சர்கள், தலமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.