Published : 25 Feb 2020 07:09 AM
Last Updated : 25 Feb 2020 07:09 AM
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னையில் நாளை (பிப்.26) நடைபெறுகிறது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதுதொடர்பாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசியர் அருணன், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவை ஒன்றுக்குஒன்று தொடர்புடையவை. அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தின் முகப்புரையில் கூறியதற்கு எதிரானதாக சிஏஏ உள்ளது. இந்தச் சட்டத்தில் முஸ்லிம் மதம் சேர்க்கப்படவில்லை. மேலும் இலங்கை, பூடான், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் குடியுரிமை இல்லை என கூறப்பட்டுள்ளதால் இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள்.
பாகிஸ்தானின் உள்ள அகமதியாக்கள், பூடானில் இருக்கும் கிறிஸ்துவர்களும் அங்கு பாதிக்கப்பட்டுதான் இந்தியா வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது. எனவே, அடிப்படையிலேயே குறைபாடுள்ளதாக குடியுரிமை சட்டம் உள்ளது. அசாமில் என்ஆர்சி இறுதிப்பட்டியலின்படி 19 லட்சம் மக்கள் குடியுரிமையற்றவர்களாக மாறியுள்ளனர். அதில் 10 லட்சம் பேர் இந்துக்கள்தான் உள்ளனர். அப்படியெனில் இந்தியா முழுவதுள்ள எண்ணிக்கை கணக்கிட்டு சிந்தித்து பார்க்க வேண்டும்.
சிஏஏ-வால் பாதிப்பில்லை என மத்திய அரசு கூறுவது ஏமாற்று வேலையாகும். அதனால் கேரளா, புதுச்சேரி வரிசையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோரின் பூர்வீகம், பிறந்த தேதி ஆவணங்கள் உட்பட புதிதாக சேர்க்கப்பட்ட 6 கேள்விகளை நீக்கும்வரை என்பிஆர் பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இவைகளின் பாதிப்பறிந்து பாஜக கூட்டணி கட்சிகள்கூட தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, தமிழக அரசு தயக்கமின்றி எதிர்ப்பை பதிவு செய்ய முன்வர வேண்டும்.
இதை வலியுறுத்தி நாளை (பிப்.26) சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி, இந்து என்.ராம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா உள்ளிட்டோர் இருந் தனர். தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் பெற்றோரின் பூர்வீகம், பிறந்த தேதி ஆவணங்கள் உட்பட புதிதாக சேர்க்கப்பட்ட 6 கேள்விகளை நீக்கும்வரை என்பிஆர் பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT