Published : 24 Feb 2020 09:22 PM
Last Updated : 24 Feb 2020 09:22 PM

வலை விரிக்கும் நவீன செயலி: 'செல்போன் பெண்'ணிடம் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்த இளைஞர்கள்: அனைவரையும் ஏமாற்றி சொந்த வீடு கட்டிய இளைஞர்

நவீன செயலி மூலம் சபல எண்ணமுள்ள ஆயிரக்கணக்கான ஆண்களைப் பெண்ணென்று பேசி நம்பவைத்து, நூதன முறையில் பணத்தைக் கறந்து கோடீஸ்வரர் ஆன இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் வசிப்பவர் உதயராஜ் (26). இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல லிஃப்ட் கம்பெனியில் பணியாற்றுகிறார். கை நிறைய சம்பளம். இவர் சமீபத்தில் யூடியூபில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது இடையிடையே (Locanto app) லொகான்டோ என்கிற செயலி வந்துள்ளது.

உதயராஜ் அந்தச் செயலியைச் சோதித்தபோது பெண்களிடம் ஆபாசமாக உரையாட, வீடியோ காலில் பேச, ஆபாசப் படத்திற்கு என தனித்தனி விலை போட்டு அவருக்கு மெசேஜ் வந்துள்ளது.

இந்நிலையில் உதயராஜ் அந்தச் செயலியில் தனது செல்போன் எண்ணைப் பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண் தன்னை பிரியா என அறிமுகம் செய்துகொண்டு ரூ.100 பணம் அனுப்பினால் படம் அனுப்புகிறேன், பிடித்திருந்தால் பின்னர் பேசலாம் என்று கூறியுள்ளார்.

தனக்கு வலை விரிக்கப்படுவது தெரியாத உதயராஜ், உடனடியாகப் பணம் அனுப்பும் செயலி மூலம் ரூ.100 அனுப்பியுள்ளார்.

அவருக்கு உடனடியாக இளம்பெண்ணின் ஆபாசப் படம் செல்போனில் வந்துள்ளது. அதைப் பார்த்தவுடன் மயங்கிப் போன உதயராஜ் அந்தப் பெண்ணுடன் நட்பு வைத்துக்கொள்ள எதையும் இழக்கத் தயாரானார். உடனடியாக அந்தப் பெண்ணின் எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

தொடர்ந்து வீடியோ காலில் பார்க்க வேண்டும் என்றால் 1500 ரூபாய் செலுத்த வேண்டும் என பிரியா கூறியுள்ளார். உடனடியாக உதயராஜ் ரூ.1500- ஐ பணப் பரிவர்த்தனை செயலி மூலம் அனுப்பியுள்ளார். அதன் பின்னர் பேசுவதற்கு பணம் செலுத்தச் சொல்லி ஆபாசமாகப் பேசியுள்ளார் பிரியா. வீடியோ காலில் அழைக்கும்போது வர மறுத்துள்ளார்.

தொடர்ந்து நாள் கணக்கில் பிரியா, பிரியா என பணத்தைக் கொட்டிக் கொடுத்துப் பேசியுள்ளார். உன்னையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என அலைந்துள்ளார். ஆனால், பிரியா சம்மதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் பிரியாவுக்கு பணம் அனுப்ப உதயராஜ் மறுத்துவிட்டார்.

எனக்குப் பணம் அனுப்பாவிட்டால் போலீஸில் புகார் அளித்துவிடுவேன் என பிரியா மிரட்டியுள்ளார். அதன்பின் ஆன்லைனில் உதயராஜ் மீது புகார் அளித்த காப்பியை அனுப்பியுள்ளார். இதனால் விரக்தியின் உச்சத்தில் இருந்த அவர் பணம் அனுப்பவில்லை. திடீரென இரண்டு நாட்களுக்கு முன் உதயராஜுக்கு மைலாப்பூர் காவல் நிலையத்திலிருந்து போன் வந்தது.

புகார் விஷயமாக விசாரிக்கவேண்டும் வாருங்கள் என்று போலீஸார் கூறினர். அதன்படி ஸ்டேஷனுக்குப் போனார் உதயராஜ். ''என்ன புகார் கொடுத்தீர்கள்? யார் அந்த உதயராஜ்? உங்களை பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுப்பது?'' என்று காவல் நிலையத்தில் கேட்டனர்.

''உதயராஜ் பாலியல் தொல்லை கொடுத்தாரா? நான்தான் சார் அந்த உதயராஜ்'' என்று கூற, ''உங்கள் நம்பரிலிருந்துதான் புகார் கொடுத்து எங்களுக்கு வந்துள்ளது'' என்று போலீஸார் கூறினர்.

உதயராஜ் நடந்த சம்பவங்களை விரிவாகக் கூறினார்.

''லேசாக சபலப்பட்டேன். பிறகு முழுவதுமாக சிக்கிக்கொண்டேன் சார். வெளியவே வர முடியவில்லை. நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு அந்தப் பெண்ணைக் கல்யாணம் கூட செய்துகொள்கிறேன் என்று சொன்னாலும் பிடிகொடுக்கவில்லை சார்'' என்று உதயராஜ் புலம்பியுள்ளார்.

''அந்தப் பெண்தான் எல்லாவற்றுக்கும் ஒரு விலை வைத்திருக்கிறாரே. ஏன் இப்படி ஏமாறுகிறாய், இவ்வளவு பணத்தை இழந்த பின்னும் அந்தப் பெண்ணைக் காதலிக்கிறேன் என்றால் என்ன அர்த்தம்?'' என்று போலீஸார் திட்டியுள்ளனர்.

''என்ன செய்றது சார். அவ்வளவு பேசிவிட்டோம். அவளை என்னால் மறக்கவே முடியவில்லை'' என்று உதயராஜ் புலம்பியுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சைபர் கிரைம் பிரிவில் இதேபோன்று 170 க்கும் மேற்பட்டவர்கள் பெயரில், பெண்ணை ஏமாற்றியதாகக் கூறி ஒரே மாதிரியான புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து அனைவரையும் போலீஸார் அழைத்தபோது நாங்கள் புகாரே கொடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். இதுவும் அந்தப் பெண்ணின் வேலையாகத்தான் இருக்கும் என்று போலீஸார் முடிவு கட்டினர்.

பின்னர் உதயராஜ் கொடுத்த செல்போன் எண்ணை வாங்கிய போலீஸார் ஆய்வு செய்ததில், திருநெல்வேலி மாவட்டம் அருகே பணங்குடி என்ற இடத்தில் டவர் காட்டியுள்ளது. பின்னர் சைபர் பிரிவு போலீஸார் நெல்லைக்குச் சென்று செல்போன் எண்ணை டிராக் செய்து, பிரியாவைப் பிடிக்கச் சென்றுள்ளனர்.

பிரியாவைப் பிடிக்க அவர் வீட்டுக்குச் சென்ற போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்தது பிரியா அல்ல, ஒரு இளைஞர். அவர் பெயர் வலன் ராஜ்குமார் ரீகன் (25). ''நான் தான் பிரியா போன்று பேசி ஏமாற்றினேன்'' என்று ரீகன் கூறினார். போலீஸார் நம்பாமல் அவரது வீட்டில் சோதனை செய்ததில் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்தன.

போலீஸாரிடம் ரீகன் கூறியதாவது:

''சபல புத்தியுள்ள ஆண்கள்தான் என்னுடைய இலக்கு. சென்னை சேத்துப்பட்டில் நான் பணியாற்றியபோது அங்கு வேலை பார்த்த சில பெண்களின் கையில் செழிப்புடன் பணம் புரள்வதைக் கண்டேன். என்ன என்று விசாரித்தபோது லொகான்டோ செயலி பற்றி தெரிந்துகொண்டேன்.

அவர்கள் இதுபோன்ற செயலி மூலம் சபல புத்தியுள்ள ஆண்களிடம் ஆபாசமாகப் பேசிப்பேசியே பணம் கறப்பதை தெரிந்துகொண்டேன். அய்யோ நான் பெண்ணாக பிறக்கவில்லையே என்று யோசித்தேன். ஏன் பெண்ணாக பிறந்தால்தான் இப்படி சம்பாதிக்க முடியுமா? பெண்போல் பேசினால் போதாதா? என்று குரல் மாற்றிப் பேசும் செயலி மூலம் பெண் குரலில் பேச முடிவெடுத்தேன்.

போட்டோவுக்கு எங்கு போவது? அதற்கும் ஃபேஸ்புக்கில் இருந்து அதிகம் யாரும் பார்க்காத பெண்ணின் புகைப்படத்தை எடுத்து போட்டோஷாப் மூலம் ஆபாசப் படமாக மாற்றினேன். அப்புறம் லொகான்டோ செயலியில் பெண்கள் பெயரில் கணக்குத் தொடங்கி, பெண் போல் பேசி சம்பாதிக்க ஆரம்பித்தேன். விட்டில் பூச்சி போல வந்து விழுந்தார்கள். நேரமே இல்லாத அளவுக்கு அனைவரிடமும் பேசினேன்.

ஆபாசமாகப் பேசினால் ரூ.1500 என்று விலை நிர்ணயித்தேன். என்னுடன் பேச வரிசை கட்டி நின்றார்கள். இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. திருமணம் செய்து செட்டில் ஆகலாம் என்று காதலிப்பது போல் ஆசை வார்த்தை கூறி பலரையும் ஏமாற்றினேன். என் பேச்சை நம்பி பணத்தைக் கொட்டிக் கொடுத்தார்கள். அவர்களாக வந்து விழும்போது வந்ததை வரவில் வைத்தேன்''.

இவ்வாறு ரீகன் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

மேலும், கடந்த 2015-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக 1000-க்கும் மேற்பட்ட ஆண்கள் என்னிடம் பேசி, பணத்தைக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் ரீகன்.

இதுவரைக்கும் யாரும் உன்னைப்பற்றி புகார் கொடுக்கவில்லையா? என போலீஸார் கேட்டனர்.

''பல பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி, என் வலையில் சிக்கும் ஆண்களிம் அந்தப்பெண்கள் பேசுவதுபோல் ஆபாச உரையாடல்கள் வைத்துக்கொள்வேன்.

அவர்கள் பேசுவது என் செல்போனில் பதிவாகியுள்ளதாக அவ்வப்போது சொல்லி லேசாக மிரட்டியும் வைப்பேன். என் போட்டோக்கள், வீடியோக்கள் உனக்கு அனுப்பிய ஆதாரம் என்னிடம் உள்ளது. போலீஸில் மாட்டிவிடுவேன் என மிரட்டி அப்படியும் பணம் கறப்பேன். மசியாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஆன்லைன் புகார் பிரிவு. ஒரு புகாரைத் தட்டிவிட்டு அதன் ஸ்க்ரீன் ஷாட்டை அனுப்பி வைப்பேன்.

மானத்துக்குப் பயந்து ஆடிப்போய், கேட்கும் பணத்தைக் கொடுப்பார்கள். விட்டால் போதும் என ஓடிப் போனவர்கள்தான் ஆயிரக்கணக்கில் உள்ளனர். சபலமே என் மூலதனம், உங்களுக்கு ஒன்று தெரியுமா? வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏராளமானோர் எனக்கு கஸ்டமர்கள்'' என்றார் ரீகன்.

அவரின் பதிலைக் கேட்ட போலீஸார் அதிர்ந்து போயினர்.

''பெண் என்று நினைத்து உன்னிடம் பேசி, பணத்தைக் கொடுத்தவர்கள் இப்போது உன் முகத்தை செய்தியில் பார்த்தால் தற்கொலை செய்துக்கொள்வார்கள்'' என்று போலீஸார் கூறியுள்ளனர்.

ஆடியோ கால், குறுஞ்செய்தியில் மட்டுமே ஆபாசமாகப் பேசும் ரீகன் வீடியோ காலில் பேச அழைக்கும்போது மட்டும் முகம் தெரியும் என்பதால் மறுத்து வந்துள்ளார். ஆனால் வலையில் சிக்கிய ஆண்கள், ரீகனை பெண் என நினைத்து ஆபாசமாகப் பேசத் தொடர்ந்து செல்போனில் அழைத்து வந்துள்ளனர். பணம் அனுப்பிக் கெஞ்சியுள்ளனர்.

பணம் போடாதவர்கள், இதற்குமேல் வேலைக்கு ஆகமாட்டார்கள் என்று ரீகன் தெரிந்துகொண்டால், பெண் பெயரில் புகார் அளித்துள்ளார். அதுவும் வலையில் சிக்கிய ஆண்கள் எண்ணிலேயே ஆன்லைன் புகாரை ரீகன் அளித்துள்ளார். இதனால் போலீஸார் கால் செய்து விசாரணை செய்யும் வேலையில், ஏமாந்த ஆண்கள் பயந்துபோய் ரீகன் புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி பணம் கொடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா என பல்பொடி விளம்பரம்போல் சிக்கியவர்களை எல்லாம் ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸார் விசாரணை செய்து கொண்டிருக்கும்போதே, ரீகன் கைது செய்யப்பட்டது தெரியாமல் துபாயைச் சேர்ந்த இளைஞர் தினமும் 5000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தி வருவதும், ரீகன் செல்போனுக்குத் தொடர்ந்து அழைத்துள்ளதும்தான் பெரிய வேடிக்கை.

ரீகன் பொறியியல் படித்த பட்டதாரி என்பதால் அவருக்குச் செயலிகளைக் கையாள்வதும், வாய்ஸ் சேஞ்சர் வசதியைப் பயன்படுத்துவதும் எளிதாக இருந்துள்ளது. நவீன டெக்னாலஜியைப் பயன்படுத்தி பல ஆண்களை மிரட்டி ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார்.

மோசடி செய்து சொந்தமாக வீடு, கார் மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் ரீகன் வாங்கியுள்ளதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரீகனைக் கைது செய்த போலீஸார் அவர் மீது (ஐபிசி 384, 506(2), rw 66C,66D It act 2000) மோசடி செய்து பணம் பறித்தல், கொலை மிரட்டல், தொழில்நுட்பம் மூலம் மோசடி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இன்று ரீகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரீகனைப் போன்று பலர் இந்தச் செயலி மூலம் ஏமாற்றி வருவதைக் கண்டுபிடிக்க, ரீகனைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதுபோன்ற செயலிகளில் பணம் கட்டி வீண் சபலத்தால் பணத்தை இழக்கவேண்டாம் என பொதுமக்களை போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x