Published : 24 Feb 2020 04:31 PM
Last Updated : 24 Feb 2020 04:31 PM
ஓசூரில் மத வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓசூரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்ற ஓசூர் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அவரது பொது நல மனுவில், “ஓசூரில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டப்பட்ட அம்மன் கோயிலில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்தப்பட்டு வருவதால், பள்ளி மாணவர்களும், வயதானவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
கடந்த 2005-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நாடு முழுவதும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பயன்படுத்தப்படும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டுமென மாநகராட்சி ஆணையரிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்ற ஓசூர் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மத வழிபாட்டுத் தலங்களில் சட்டவிரோதமாக கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தபடுகிறதா? என ஆய்வு செய்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஓசூர் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT