Published : 24 Feb 2020 01:49 PM
Last Updated : 24 Feb 2020 01:49 PM
அரசு போக்குவரத்துக் கழக கண்காணிப்பாளர்கள் ஊதிய நிர்ணயம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஓய்வு பெற்ற எஸ்.சம்பத், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் தொழிலாளர்களுக்கு தொழிற்தாவாச் சட்ட ஒப்பந்தப்படியும், கண்காணிப்பாளர், பொறியாளர்கள் முதல் மேலாண் இயக்குனர் வரையுள்ளவர்களுக்கு அரசு ஊதியக் குழு பரிந்துரைகளின்படியும் ஊதிய நிர்ணயம் செய்யப்படுகிறது.
7-வது ஊதியக்குழு பரிந்துரை அமலான போது போக்குவரத்துக் கழகங்களில் கண்காணிப்பாளர், பொறியாளர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு ஊதியக்குழு பரிந்துரைபடி 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆனால் இதற்கு பதில் தொழிலாளர்களுக்கு வழங்குவது போல் 2.44 மடங்கு அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்து 31.10.2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணை நிதித்துறை அரசாணை மற்றும் போக்குவரத்துறை அரசாணைகளுக்கு முரணாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. கண்காணி்ப்பாளர்கள் பலருக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு இந்த அடிப்படையில் ஊதிய உயர்வு மறுக்கப்பட்டுள்ளது.
எனவே அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர்களுக்கான ஊதிய உயர்வு நிர்ணயம் தொடர்பாக 31.10.2018-ல் தமிழக போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். எனக்கு 7-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் மறு நிர்ணயம் செய்து பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதி்ட்டார். பின்னர் மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 23-க்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT