Last Updated : 24 Feb, 2020 01:41 PM

 

Published : 24 Feb 2020 01:41 PM
Last Updated : 24 Feb 2020 01:41 PM

பணிநிரவல் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு எதிர்ப்பு: விருதுநகரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் தர்ணா

விருதுநகர்

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததைக் கண்டித்து விருதுநகரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் இன்று முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறுகையில், "விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் 10 பேரும், அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் ஒருவரும் உபரியாக உள்ளதாகக் கூறி மாவட்டத்திலுள்ள பிற ஒன்றியங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டனர்.

இந்தப் பணிநிரவல் கடந்த கால நடைமுறைகளுக்கு எதிராகவும், சட்டவிரோதமாகவும் இருப்பதாகக் கூறி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தோம். அந்த உத்தரவிற்கு நீதிபதி வேலுமணி 19.9.19 அன்று இடைக்கால உத்தரவு வழங்கினார்.

பின்பு நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் அரசு பணிநிரவல் செய்தது சரி எனக்கூறி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் டி.ரவீந்திரன், துரைசாமி அடங்கிய அமர்வு கடந்த 6.2.2020 அன்று தனிநீதிபதி அளித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவின் அடிப்படையில் ஏற்கெனவே பணிபுரிந்து வந்த பள்ளியில் மீண்டும் பணியேற்பு செய்திட அனுமதிக்க கோரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் 7.2.2020 அன்று மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பிற மாவட்டங்களில் இதேபோல் வழக்குகளில் தடையாணை பெற்ற ஆசிரியர்களை பணியேற்பு செய்திட அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அனுமதி அளித்து பணியில் சேர்ந்து விட்டனர்.

ஆனால் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் காலதாமதம் செய்துவருகிறார். இதை கண்டித்து தற்போது முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x