Published : 24 Feb 2020 01:48 PM
Last Updated : 24 Feb 2020 01:48 PM
நாசாவுக்குச் செல்ல ரூ.2 லட்சம் வழங்குவதாக அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாணவி அபிநயா நன்றி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் அருகே கருப்பட்டிபாளையத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சசிகலா தம்பதியின் இரண்டாவது மகள் அபிநயா. இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட ஆன்லைன் தேர்வில் பங்கேற்று சிறப்பு இடம் பிடித்ததையடுத்து நாசாவுக்கு வருமாறு அபிநயாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாசாவுக்குச் செல்ல ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்ற நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக நாசாவுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதால், மாணவி தரப்பில் பலரிடம் நிதியுதவி கேட்கப்பட்டது. இந்நிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மாணவி அபிநயாவை அழைத்து ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று வழங்கி வாழ்த்தினார்.
மேலும், அமெரிக்காவில் தங்குவது உள்ளிட்ட இதர செலவுகளுக்கு மேலும் ரூ.2 லட்சம் தேவைப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாணவியை ஊக்குவிக்கும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்குவதாக நேற்று அறிவித்தார்.
இதுகுறித்து மாணவி அபிநயா, "நாசா செல்வதற்கு தனக்கு ரூ.2 லட்சம் தந்து ஊக்குவித்த தமிழக முதல்வருக்கும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வரின் இந்த அறிவிப்பு என்னை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT