Published : 24 Feb 2020 12:27 PM
Last Updated : 24 Feb 2020 12:27 PM
"பெண்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி அதன் மூலமாக பெண் சமுதாயத்தைத் தலை நிமிரச் செய்தவர் ஜெயலலிதா" என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு 2,472 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்திற்கு முதல் தவணை செலுத்தி பாஸ் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இன்று நடைபெற்றது.
.
இந்த நிகழ்ச்சிக்கு அம்மா சேரிடபில் டிரஸ்ட் செயலாளர் ஆர்.பி.உ.பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். முதல் தவணை செலுத்திய பாஸ் புத்தகத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வினய், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே. மாணிக்கம், கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயகுமார், "உலகத்தில் பெண் இனத்தின் தெய்வமாகப் போற்றப்படும் ஒரே தலைவியாக ஜெயலலிதா உள்ளார்.
பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றிக் கொலை செய்த காலத்தில் பெண் குழந்தைகளைக் காப்பாற்ற தொட்டில் குழந்தைத் திட்டத்தை உருவாக்கினார். இந்தத் திட்டம் நாடெங்கும் திரும்பிப்பார்க்க வைத்தது. இத்திட்டத்தினைப் பாராட்டி அன்னை தெரசாவே தேடி வந்து பாராட்டினார்.
அதுமட்டுமல்லாது பெண் குழந்தை பிறந்தால் பெண் குழந்தை பெயரில் வைப்பு நிதியும், மேலும் மகளிர் காவல் நிலையங்கள், பெண் கமாண்டோ படைகள், பெண்கள் சுய உதவி குழுக்கள், ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி இப்படி பெண்களுக்கு அவர் அறிவித்த திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இது போன்ற திட்டங்கள் மூலம் பெண் சமுதாயத்தைக் காப்பாற்றி தலை நிமிரச் செய்தவர் அவர். 'அம்மா'வின் வழியில் இன்றைக்கு பெண் சமுதாயத்திற்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார்.
கடந்த பிறந்த நாளில் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இரண்டு சக்கர வாகனத் திட்டத்தினை பாரதப் பிரதமர் மூலம் துவக்கி வைத்தார்.
இந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதியை 'பெண்கள் பாதுகாப்பு நாளாக' விதி எண் 110-ன் கீழ் அறிவித்து அதில் பல்வேறு திட்டங்களையும் அறிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகளைப் பாதுகாக்க காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து அதற்கு அரசாணையும் நிறைவேற்றினார். இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களைத் திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கி தமிழினத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
கோட்டையில் எந்தக் கோப்புகளையும் தேங்காமல் உடனடியாக கையெழுத்திட்டு கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் நன்மை செய்துவருகிறார்.
தொழில் துறையில் புரட்சி, விவசாயத்துறையில் புரட்சி, கல்வித் துறையில் புரட்சி, இப்படி நாள்தோறும் ஒவ்வொரு துறையிலும் புரட்சி செய்து தமிழகத்தில் ஒரு பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார்.
ஆனால், முதல்வர் ஒரு சாமானியர் என்ற காரணத்தினால் அவரின் சாதனைகளை, உழைப்புகளை எல்லாம் எதிர்க்கட்சிகள் மூடி மறைக்கப் பார்க்கின்றன. இதற்கெல்லாம் தாய்மார்கள் தக்க பாடத்தை வருகின்ற தேர்தல்களில் எதிர்க்கட்சிக்குப் புகட்டவேண்டும்" என்று பேசினார்.
அதைத்தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற 3000-க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் குழந்தைகளைச் சுமந்தவாறு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
முதல்வருக்கு நன்றி..
உறுதிமொழி ஏற்புக்குப் பின்னர், பிப்ரவரி 24-ம் தேதியை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவித்த முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பெண்கள் தெரிவித்தனர். மேலும், பெண் குலத்தை காத்துவரும் முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் முதலமைச்சரிடம் கூறுங்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT