Published : 24 Feb 2020 11:25 AM
Last Updated : 24 Feb 2020 11:25 AM

ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள்: குழந்தைகள், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர், படம்:ம.பிரபு

சென்னை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இனி, மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். மேலும், பெண் குழந்தைகள் நலன் தொடர்பாக பல்வேறு திட்டங்களையும் தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள், 21 வயதை நிறைவு செய்யும்போது, அவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் அவர்களது பெயரில் வங்கியில் செலுத்தப்படும் என்பது உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று, பிப்.24, ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி, தன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, தலைமைச் செயலகத்துக்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 72 லட்சம் மரக்கன்றுகளை நடும் விழாவை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

மரக்கன்று நடும் முதல்வர் பழனிசாமி, படம்:ம.பிரபு

பின்னர், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. இதில், பெண் குழந்தைகள் தொடர்பான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். அரசு ஆதரவற்றோர் இல்லத்தில் வாழும் குழந்தைகள், பெண்களுக்கு நிதியுதவிகளை முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x