Published : 23 Feb 2020 06:04 PM
Last Updated : 23 Feb 2020 06:04 PM
கிரீமிலேயர் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தன் முகநூல் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
கிரீமிலேயர் வரம்பைக் கணக்கிடுவதில் ஓபிசி பிரிவினரின் ஊதியத்தையும் வருவாய்க் கணக்கில் சேர்ப்பது சமூக அநீதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை ஒழிப்பதற்கான அரசியல் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு:
''பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக தேசிய அளவிலும், மாநில அளவிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இது போராடி பெற்ற உரிமை ஆகும். இந்த உரிமையை பறிக்கவும், அதை சம்பந்தப்பட்ட மக்கள் அனுபவிப்பதை தடுக்கவும் சதிகள் நடக்கின்றன. ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வு இன்றைய இளைய தலைமுறையிடம் இல்லை. எனவே, அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இட ஒதுக்கீட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும் பகுதியில் சுருக்கமாகவும், புரியும்படியும் எழுதவிருக்கிறேன்.
கிரீமிலேயர் பற்றி...
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கிரீமிலேயர் என்ற ஒன்று இல்லை. ஆனால், 1990-ம் ஆண்டில் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க அப்போதைய பிரதமர் வி.பி.சிங் ஆணையிட்டார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களை திருப்திப்படுத்தும் நோக்குடன் உருவாக்கிய ஏற்பாடுதான் கிரீமிலேயர் ஆகும். 16.11.1992 இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கினார்கள்.
அதாவது, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கி இருக்கிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உயர்பதவிகளில் இருப்பவர்கள், அதிக வருவாய் ஈட்டுபவர்கள் ஆகியோரை வளமானவர்கள், அதாவது கேக்கின் மீது இருக்கும் கிரீமைப் போன்றவர்கள் என்று கருதி அவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்பது தான் 9 பேர் கொண்ட அமர்வில் இடம் பெற்றிருந்த பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் பொருள் ஆகும்.
குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள், மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் உள்ள குரூப் 1, 2 ஆகிய அந்தஸ்துடைய அதிகாரிகள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் ஆகியோரும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் கூடுதலாக இருப்பவர்களும் கிரீமிலேயர் என்று அழைக்கப்படுவர். அவர்களின் குழந்தைகளுக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கிடைக்காது''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT