Published : 23 Feb 2020 07:28 AM
Last Updated : 23 Feb 2020 07:28 AM

தரை பகுதியைவிட கடலில் காணப்படும் தமிழர்களின் சுவடுகளை ஆராய வேண்டும்: தமிழ்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு வலியுறுத்தல்

பெரும்பாக்கம்

கடலில் இருக்கும் பண்டைய தமிழர்களின் சுவடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு தெரிவித்தார்.

பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்துறை சார்பில் உலகளாவிய தமிழின் தொன்மை என்ற தலைப்பில் பயிலரங்கு நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் ந.கலைவாணி தலைமை தாங்கினார். கடலியல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு பயிலரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழர்கள் பண்டைக் காலம் தொட்டே நாகரிக வளர்ச்சி அடைந்தவர்கள். தங்களது வணிகத்தின் மூலமாகவும் படையெடுப்புகளின் வாயிலாகவும் பல நாடுகளுக்குப் பரவி இருக்கிறார்கள். அங்கெல்லாம் தமிழ் அடையாளத்தை பதித் திருக்கிறார்கள். அந்த வகை யில் பல சுவடுகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. குறிப்பாக, உலகின் பல நாடுகளில் பல ஊர்ப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக உள்ளன. பல பழங்குடி இனங்கள் பண்டைய தமிழ்ச் சொற்களை அப்படியே பயில்கிறார்கள்.

நாம் மறந்து போன சங்ககால சொற்களை அவர்கள் இன்னமும் பயன்படுத்துகிறார்கள். பண்டைத் தமிழரின் கடல் அறிவு என்பது மிகவும் வியக்கத்தக்கது. பல்வேறு வகையான கப்பல்களை பண்டைக் காலம் தொட்டே தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

கடலின் நீரோட்டம் அறிந்து கலங்களை செலுத்தி இருக் கிறார்கள். கடல்வாழ் உயிரினமான ஆமைகள் கண்டம் விட்டு கண்டம் இடம்பெயரும் வழித்தடங்களை அறிந்து கடல் பயணத்துக்காக அந்த தடங்களை பயன்படுத்தி இருக்கக் கூடும் என்று தெரியவருகிறது. ஆழ்கடலில் நான் பல இடங்களில் ஆய்வு செய்து இருக்கிறேன்.

தரையில் இருக்கும் பண்டைய தமிழரின் சுவடுகளைவிட கடலில் தமிழர்களின் சுவடுகள் அதிகமாக இருக்கக்கூடும். அவற்றை இன்னும் விரிவாக ஆய்வு செய்து வெளிக்கொணர வேண்டும். நமது மரபுச் செல்வங்களை மீட்டெடுக்க வேண்டும். உலகம் முழுக்க நாங்கள் ஒருங்கிணைப்பை உருவாக்கி இருக்கிறோம். உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழர்களின் உதவியோடு பல மீட்டெடுப்பு செயல்களை செய்து வருகிறோம். மாணவர்களும் எங்கள் பணியில் இணைந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பயிலரங்கில் தமிழ் துறை தலைவர் பச்சியப்பன், கணினி அறிவியல் துறை தலைவர் மலையரசு, பேராசிரியர்கள் செந் தில்குமார், சீமானம்பலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x