Published : 22 Feb 2020 07:56 PM
Last Updated : 22 Feb 2020 07:56 PM
தாம் படித்த அரசுப் பள்ளியில் சேதமடைந்து பயன்படுத்த முடியாமலிருந்த வகுப்பறைக் கட்டிடத்தை முன்னாள் மாணவர்கள் முதற் கட்டமாக சீரமைத்து கொடுத்துள்ளனர். மேலும் பள்ளியை தத்தெடுத்து மேம்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியில், சுற்றியுள்ள கிராமங்களான புலிப்பட்டி, வலையபட்டி, அழகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தற்போது படிக்கின்றனர். அதற்கேற்றவாறு இப்பள்ளியில் சுமார் 40 வகுப்பறைகள் உள்ளன.
இங்குசில வகுப்பறைகள் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்திருப்பதாக முன்னாள் மாணவர்கள் அறிந்தனர். அதனைத் தொடர்ந்து இங்கு 1991 மற்றும் 1993-ம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்களில் பலர் ஐஏஎஸ், ஐஆர்எஸ் மற்றும் டாக்டர்கள், இஞ்ஜினியர்கள் மற்றும் ராணுவம், காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்.
பள்ளியின் நிலைமையை அறிந்த அவர்கள் தாம் படித்த பள்ளியை மேம்படுத்த வேண்டும் என முடிவெடுத்தனர். அதற்காக மாணவர்களை ஒன்றிணைத்து ‘வாட்ஸ் அப்’ குழுவை ஏற்படுத்தினர். அதன் முதல் கட்டமாக ரூ. 2 லட்சம் மதிப்பில் சேதமடைந்த வகுப்பறைக் கட்டிடங்களைச் சீரமைக்கும் பணியை சில வாரத்திற்கு முன்பு தொடங்கினர்.
சீரமைப்புப் பணிகள் முடிந்து புதுப்பிக்கட்ட கட்டிடங்களை ஒப்படைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதற்கு அப்பபள்ளியின் தலைமைஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் அல்லாரைசல் மற்றும் முன்னாள் மாணவர்கள் வழக்கறிஞர் கண்ணன், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மகேந்திரன், உதவிதலைமை ஆசிரியர் வாசிமலை, கல்விக்குழு தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் சங்கரலிங்கம், மனோகரன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைs செய்தனர்.
இது குறித்து 1991, 1993-ம் ஆண்டுபிளஸ் 2 படித்த மாணவர்கள் கூறியதாவது: அ.வல்லாளபட்டி அரசுப் பள்ளியில் படித்து பலர் அரசுத் துறையில் உயர்ந்த நிலையில் உள்ளனர். ஆனால் நாங்கள் படித்த பள்ளிக் கட்டிடம் பராமரிப்பின்றி இருப்பது கண்டு வேதனை அடைந்தோம். இதனால் முதல்கட்டமாக ரூ. 2 லட்சம் மதிப்பில் ஒருகட்டிடத்தை சீரமைத்துள்ளோம். மேலும் இப்பள்ளியை தத்தெடுத்து இன்னும் பலமேம்பாட்டு பணிகளை செய்யவுள்ளோம், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT