Published : 22 Feb 2020 04:40 PM
Last Updated : 22 Feb 2020 04:40 PM
மத்தியில் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து தீவிரவாதம், நக்சல் வன்முறை குறைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, 80 பெண்கள் உள்பட 1,160 பேர் துணை உதவி ஆய்வாளர்களாகப் பயிற்சி பெற்றனர். இதன் நிறைவு விழா இன்று (பிப்.22) காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அவர் ஏற்றுக்கொண்டார்.
மேலும், பயிற்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் கிஷண் ரெட்டி பேசியதாவது:
"நீங்கள் நாட்டில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் பதற்றமான பகுதிகளை மட்டுமில்லாமல் தேசத்தின் முக்கியமான பகுதிகளைப் பாதுகாத்து வருகிறீர்கள். சிறப்பு வாய்ந்த சிவராத்திரி நாளில் நீங்கள் பயிற்சியை நிறைவு செய்துள்ளளீர்கள். உக்கிரத்தின் அடையாளமாக சிவன் இருக்கிறார். எதிரிகளை அழிப்பதற்காக உங்கள் அனைவருக்கும் அந்த உக்கிரம் கிடைக்கட்டும்.
உங்களது வாழ்க்கையில் இன்று புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. உங்களது பணியில் 24 மணிநேரமும் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ராணுவ வீரர் எப்போதாவதுதான் போரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் போர்தான். ராணுவ வீரர்களுக்கு எதிரி யார் என்று தெரியும். ஆனால் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு எதிரி எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரியாது. எனவே, ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். உங்கள் மீது இந்த தேசம் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளது.
விமான நிலையங்களில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் எவ்வாறு தங்களது பணியைச் செய்கிறார்கள் என்பதை நான் பார்த்துள்ளேன். விமானத்தைத் தவற விடக்கூடாது என்ற ஆர்வத்தில் சில பயணிகள் சில நேரம் மோசமான முறையில் நடந்துகொண்டாலும் பொறுமையுடன் வீரர்கள் பணியாற்றி வருவதைப் பார்த்துள்ளேன். சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு மிகப்பெரும் பொறுப்புகள் உள்ளன. இதனை இடைவிடாது செயல்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். மக்களின் உயிர் மற்றும் நாட்டின் முக்கியமான சொத்துகள் உங்களது கைகளில் உள்ளன.
கடந்த பல ஆண்டுகளில் சிஐஎஸ்எஃப்பின் பங்கு பல்வேறு விதமாக மாறியுள்ளது. உயர் தொழில் போட்டித் திறன், ஒழுங்கு, பணி மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி புதிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பு என்பது தொடர்ந்து மாறி வருகிறது.
கடந்த 2014-ல் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து தீவிரவாதம், நக்சல் வன்முறை மற்றும் எந்த வடிவிலான வன்முறையையும் சிறிதும் சகித்துக்கொள்ள முடியாது என்ற நிலையைப் பின்பற்றி வருகிறோம். நாம் உணரக்கூடிய வகையில் நக்சல், தீவிரவாத வன்முறை குறைந்துள்ளதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வளர்ச்சியைத் தடுப்பதற்காக புதிய வழிகளில் எதிரிகள் வரக்கூடும். நீங்கள் விழிப்புடனும் புத்திக்கூர்மையாகவும் இருந்தால்தான் அவர்களை அழிக்க முடியும். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளைச் சிறந்த முறையில் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு கிஷண் ரெட்டி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் ராஜேஷ் ரஞ்சன், தெற்கு பிரிவு ஐஜி விக்ரம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment