Published : 22 Feb 2020 03:12 PM
Last Updated : 22 Feb 2020 03:12 PM
"எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய போது திருச்சியில் சி.பா.ஆதித்தனார் பெயரில் முதல் சத்துணவு கூடத்தைக் கட்டி கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார்" என முதல்வர் பழனிசாமி நினைவு கூர்ந்தார்.
தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன் பட்டினத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் செலவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.
இந்த மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், "டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணி மண்டபத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விழாவில் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளமே பா.சிவந்தி ஆதித்தனாரின் சாதனைகளுக்கு சாட்சி. இயற்கையே மழை பொழிந்து பா.சிவந்தி ஆதித்தனாரை வாழ்த்துகிறது.
எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய போது திருச்சியில் சி.பா.ஆதித்தனார் பெயரில் முதல் சத்துணவு கூடத்தைக் கட்டி கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார்" என்று பேசினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்தார்.
* திருச்செந்தூர் ஆலந்தலையில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* தாமிரபரணி - கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராம விவசாய நிலங்கள் பாசன உறுதி பெறும்.
* அதேபோல், கருமேனியாற்றின் குறுக்கே ரூ.3 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும்.
* திருச்செந்தூரில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்படும். சாத்தான்குளம் வட்டத்திற்கும் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்படும்.
* தூத்துக்குடி மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கு புதிய அலுவலகம் கட்டப்படும்.
* கடம்பூர், விளாத்திகுளம், புதூர் பேரூராட்சியில் 180 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT