Published : 22 Feb 2020 10:10 AM
Last Updated : 22 Feb 2020 10:10 AM
நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் தண்டனையில் இருந்துத் தப்பிக்க எடுத்து வரும் முயற்சிகளுக்கு இனியும் இடம் கொடுக்கக் கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (பிப்.22) வெளியிட்ட அறிக்கையில், "நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கொலை செய்த மன்னிக்க முடியாத கொடூரமான குற்றவாளிகள். இவர்களுக்குத் தண்டனையை நிறைவேற்ற முதலில் ஒரு தேதி குறிக்கப்பட்ட பிறகு ஒவ்வொருவரும் தண்டனையிலிருந்து தப்பிக்க சட்டநுணுக்கங்களைப் பயன்படுத்தி முயற்சி எடுத்ததன் விளைவாக தண்டனையை நிறைவேற்ற இரண்டாவது முறையாக தேதி குறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க மீண்டும் முயற்சி எடுத்ததால் இரண்டாவது முறையும் தண்டனை நிறைவேற்றப்படாமல் போனது.
இதற்கெல்லாம் காரணம் குற்றவாளிகளும், குற்றவாளிகளுக்கு சட்ட வாய்ப்புகளை சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு ஆதரவாக வாதாடுகின்ற வழக்கறிஞர்களும் தான். இதனை எல்லாம் கேள்விப்படும் மக்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டும் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படாமல் தள்ளிப்போவதை பார்த்து மனம் வேதனை அடைகிறார்கள்.
இப்படி இரண்டு முறையும் தூக்கு தண்டனையிலிருந்து தப்பித்த கொடியவர்களுக்கு தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் மூலம் வருகின்ற மார்ச் மாதம் 3 ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கைதி வினய் சர்மா சிறைச்சாலையில் உள்ள அறைச்சுவரில் முட்டிக்கொண்டு தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டு தண்டனையிலிருந்து தப்பிக்க மீண்டும் முயற்சி எடுத்துள்ளார். அது மட்டுமல்ல இவர் மனநலம் பாதிக்கப்படுள்ளதாகவும், தூக்குத் தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்றும் அவருக்காக வாதாடும் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இது ஒருபோதும் ஏற்புடையதல்ல.
எனவே, மன்னிக்க முடியாத, கொடூரமான, மிருகத்தனமான பாலியல் கொலைக்குற்றம் செய்த 4 குற்றவாளிகளுக்கும் 3 ஆவது முறையாக நீதிமன்றத்தால் குறிக்கப்பட்ட மார்ச் 3 ஆம் தேதி அன்று கண்டிப்பாக தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இதை நாடே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக, குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க சட்டத்தில் இடம் இருந்தாலும் இந்த 4 கொடியவர்களுக்கும் சட்டமும், சட்டவல்லுநர்களும், வழக்கறிஞர்களும் எவ்விதத்திலும் உதவிடக்கூடாது என்பது தான் நியாயமானது.
எனவே, இந்த 4 குற்றவாளிகளுக்கும் எவரும் எவ்விதமான பரிவும் ஆதரவும் காட்டக்கூடாது என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும், வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி அன்று நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்குத் தண்டனை உறுதியாக நிறைவேற்றப்பட்டு அதன் மூலம் இனி வரும் காலங்களில் குற்றம் புரிய நினைப்பவர்களுக்கு குற்றம் செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக மார்ச் 3 ஆம் தேதி அமைய வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT