Published : 22 Feb 2020 08:00 AM
Last Updated : 22 Feb 2020 08:00 AM

பொய் பிரச்சாரங்களால் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சி; சமூக நல்லிணக்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்- முஸ்லிம்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை

அதிமுகவுக்கான மக்கள் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொய் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற முஸ்லிம்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றுஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

சமூக விரோத சக்திகளும், பதவிக்கு வருவதற்காக பாதக செயல்களை மனசாட்சியின்றி செய்யும் சில எதிர்க்கட்சிகளும் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதை அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் அதிமுக அரசுக்கு நாளுக்கு நாள்மக்கள் பேராதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், பொய்ப் பிரச்சாரங்களை தூண்டிவிட்டு, முஸ்லிம் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த திமுகமுயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதிமுக உண்மையான மதச்சார்பற்ற இயக்கம். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் சிறுபான்மையின மக்களுக்கு உதவ இன்னும் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த அதிமுக அரசு துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் சமூகத்துக்கும், அதிமுகவுக்கும் இடையே இருக்கும் நெருக்கமான உறவையும், புரிதலையும் பிரிக்கமுயற்சிக்கும் சக்திகளை முறியடித்து, எல்லோரும் ஓரினமாக எழுச்சியுடன் முன்னேற்றம் கண்டிட, முஸ்லிம் சகோதர, சகோதரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படியான நடவடிக்கையே தவிர, நாடு முழுவதுக்கும் உரியதல்ல. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல என்று மத்திய அரசு ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு,1872-ல் இருந்தே நடைமுறையில் உள்ளது. நாடு சுதந்திரம் பெற்றபின், 1948-ல் அதற்கென தனிச்சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த 2003-ம் ஆண்டு மத்தியில் திமுக அங்கம் வகித்த பாஜக ஆட்சியில், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஏதுவாக குடியுரிமை சட்டத்தின்கீழ் குடியுரிமை விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகள் மூலம் குடிமக்களை பதிவு செய்து, தேசிய அடையாள அட்டை வழங்க வழிவகை செய்யப்பட்டது.

கடந்த 2010-ம் ஆண்டு மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் முதல்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் அங்கமாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கப்பட்டது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இந்தியாவில் 6 மாதங்களோ, அதற்கு மேலோ வசிக்கும் அனைத்து நபர்களின் விவரங்கள், ஆவணங்கள் ஏதும் இல்லாமல், குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவல்படி பதிவு செய்யப்படுகிறது.

தாய்மொழி, தந்தை, தாயார், துணைவர் பிறந்த இடம், பிறந்த தேதி, விவரம் மற்றும் ஆதார், கைபேசி எண்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் எண் ஆகிய விவரங்கள் 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

அதிமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி குறுக்கு வழியில் ஆதாயம் தேட முயற்சிப்போரின் பொய் பிரச்சாரங்களை புறந்தள்ளி, சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற அனைவரும் ஒத்துழைக்கவேண்டுகிறோம். தமிழகத்தில் எந்த ஒரு சிறுபான்மையினருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படாது. அதை அரசும் அனுமதிக்காது. சுயலாபம் அடைய சதித்திட்டம் தீட்டி செயல்படுவோரிடம் சிறுபான்மையின மக்கள் விழிப்புடனும், கவனமாகவும் இருந்து அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x