Published : 22 Feb 2020 07:34 AM
Last Updated : 22 Feb 2020 07:34 AM

சந்திரயான்-3 திட்டப் பணிகள் ஓராண்டில் முடிக்கப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

சென்னை

சந்திரயான்-3 திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் 70-வது பொதுக்குழு கூட்டம் மற்றும் ‘விண்வெளி, பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் சமீபத்திய மேம்பாடுகள்’ என்ற தலைப்பிலான 2 நாள் தேசிய மாநாட்டின் தொடக்க விழா சென்னை படூரில் உள்ள இந்துஸ்தான் அறிவியல், தொழில்நுட்பக் கல்வி மையத்தில் நேற்று நடந்தது. இதை தொடங்கி வைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது, முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பியது, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் தொடர் வெற்றிகள், சந்திரயான் திட்டம் என இஸ்ரோவின் பல்வேறு சாதனைகள் மூலமாக, விண்வெளித் துறையில் முதன்மை நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

இதுதவிர, பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உள்ளிட்ட இதரஆய்வு நிறுவனங்களும் பல்வேறு கண்டுபிடிப்புகள் மூலம் அறிவியல் வளர்ச்சியில் இந்தியா சிறந்து விளங்குவதை உலகுக்கு பறைசாற்றுகின்றன. நம் நாட்டின் வளர்ச்சிக்கு விஞ்ஞானிகள் தொடர்ந்து பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் விண்வெளி அறிவியல், பாதுகாப்பு ஆராய்ச்சி, பொறியியல் உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் 13 பேருக்கு கவுரவ விருதுகள் வழங்கப்பட்டன. நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு விண்வெளி அறிவியல் துறையில் சிறந்த தலைமைக்கான விருதும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆர்.கே.தியாகி, சென்னை மண்டலதலைவர் ஆனந்த ஜேக்கப் வர்கீஸ் மற்றும் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ‘‘மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டுஇறுதியில் ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, பத்திரமாக தரையிறக்கப்படும். அதற்கான சோதனை ஓட்ட முயற்சிகள் விரைவில் நடத்தப்பட உள்ளன. விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் 15 மாதகால பயிற்சி தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, சந்திரயான்-3 திட்டத்தையும் ஓராண்டுக்குள் முடிக்கும் வகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x