Published : 21 Feb 2020 07:04 PM
Last Updated : 21 Feb 2020 07:04 PM
உள் நோக்கத்துடனும், மறைமுகத் திட்டத்துடனும்தான், கிராமப்புற சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக் கட்ட மத்திய அரசு, புதிய விதிமுறை திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கு எதிரான, கார்ப்பரேட நிறுவனங்களுக்குச் சாதகமான, இந்த விதிமுறைகளை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது மக்களுக்கு எதிரானது. இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் பாராமெடிக்கல் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை:
'’மத்திய அரசு, மருத்துவ நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை ( Clinical Establishments Regulation act) 2010 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அதையொட்டி பல்வேறு மாநில அரசுகளும் மருத்துவமனைகள் ஒழுங்குபடுத்தும் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளன.
அதற்கான விதிமுறைகளையும்( rules) கொண்டு வந்துள்ளன. மருத்துவ நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு, மருத்துவ நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமும், விதிமுறைகளும் அவசியம். ஆனால், மத்திய மாநில அரசுகள் இச்சட்டத்தையும், விதிமுறைகளையும் சூழ்ச்சியுடன் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, சிறிய மருத்துவ நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் ஒழித்துக் கட்ட முயல்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக, இச்சட்டத்தையும், விதிமுறைகளையும் பயன் படுத்துகின்றன.
இது கடும் கண்டனத்திற்குரியது. தற்பொழுது மத்திய அரசு இந்த விதிமுறைகளில் புதிய திருத்தங்களைச் செய்துள்ளது. அதை , 14.02.2020 அன்று கெஜட்டில் வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறை திருத்தங்களின்படி, சாதாரண சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களில் செய்யப்படும், அடிப்படைப் பரிசோதனைகளுக்கான முடிவுகளில் கூட லேப் டெக்னீசியன்கள் கையெழுத்திட முடியாது.
எம்பிபிஎஸ் படித்து, ஓராண்டு சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் அல்லது நோய்குறியியல், மருத்துவ நுண்ணுயிரியியல், மருத்துவ உயிர் வேதியியலில் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்து, 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்தான் கையெழுத்திட முடியும்.
மேலும், பரிசோதனைகளில் ஏற்படும் தவறுகளுக்குக் கையெழுத்திடும் நபர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரத்தப் பரிசோதனை நிலையங்கள் கிராமப் புறங்களில் உள்ளன.
அத்தகைய இடங்களில், எம்பிபிஎஸ் படித்து ஓராண்டு சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் கிடைப்பது சாத்தியமில்லை. அதைப் போலவே,நோய் குறியியல், மருத்துவ நுண்ணுயிரியியல், மருத்துவ உயிர் வேதியியலில் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்து, 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் கிடைப்பதும் கடினம்.
எனவே, அவை மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. அதனால் லட்சக் கணக்கானோர் வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் இழப்பர். குறைவான கட்டணத்தில் இயங்கும் இந்த அருகமை ரத்தப் பரிசோதனை நிலையங்களை நம்பியுள்ள, கோடிக்கணக்கான கிராமப்புற நீரிழிவு நோயாளிகளும், இதர நோயாளிகளும் பாதிக்கப்படுவர்.
இது கிராமப்புற மக்களின் நலன்களுக்கு எதிரானது. மத்திய அரசு, நாடு முழுவதும், அரசுக்கு சொந்தமாக உள்ள 1.5 லட்சம் துணை சுகாதார நிலையங்களை, சுகாதார மற்றும் நல மையங்களாக (Health and Wellness Centres),பெயர் மாற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வழங்க உள்ளது.
இந்த நிலையங்களில் அனைத்துப் பரிசோதனைகளும், மருத்துவ சிகிச்சைகளும் கார்ப்பரேட் நிறுவனங்களால் வழங்கப்பட உள்ளன. அதைப் போலவே, மாவட்ட மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக, கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்கள் பெருகும்.
இந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசு மருத்துவ நிறுவனங்களை கபளீகரம் செய்ய உள்ள, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, வர்த்தக வாய்ப்பையும், லாபத்தையும் அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது.
இந்த உள் நோக்கத்துடனும், மறைமுகத் திட்டத்துடனும்தான், கிராமப்புற சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக்கட்ட மத்திய அரசு, இந்த புதிய விதிமுறை திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. எனவே,ஏழை எளிய மக்களுக்கு எதிரான, கார்ப்பரேட நிறுவனங்களுக்குச் சாதகமான, இந்த விதிமுறைகளை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’’.
இவ்வாறு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் பாராமெடிக்கல் கல்வி மற்றும் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி ,பொருளாளர் டாக்டர் ஜி.ரமேஷ், பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் பி.காளிதாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT