Published : 21 Feb 2020 03:46 PM
Last Updated : 21 Feb 2020 03:46 PM
மார்ச் 1 முதல் ரூ.2000 நோட்டுகள் பரிவர்த்தனையை இந்தியன் வங்கி நிறுத்துவதாகத் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து வங்கி ஊழியர் சங்க நிர்வாகி பதிலளித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனையடுத்து ஏற்கெனவே புழக்கத்திலிருந்த 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிதாக 2,000 ரூபாய், 500 ரூபாய், மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. மொத்தமுள்ள 329 கோடி ரூபாயில், 2000 ரூபாயின் புழக்கம் நடப்பு நிதியாண்டில் 7.2 கோடி ரூபாயாக சுருங்கியுள்ளது.
மத்திய அரசு கறுப்புப் பணத்தைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆங்கில நாளிதழ் தகவல் கேட்டதில், ரிசர்வ் வங்கி, ''2016-2017 ஆம் ஆண்டில் 3,542.991 மில்லியன் அளவிற்கு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன.
இதுவே 2017-2018 ஆம் ஆண்டில் 111.507 மில்லியனாக குறைந்தது. பின்னர் 2018-2019 ஆம் ஆண்டில் இது 46.690 மில்லியன் நோட்டுகளாகக் குறைந்தன என்று பதிலளித்திருந்ததாகத் தகவல் வெளியானது.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலையிலிருந்து சமூக வலைதளங்களிலும், சில செய்திகளிலும் இந்தியன் வங்கி மார்ச் 1 முதல் 2000 ரூபாய் பரிவர்த்தனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளதாக செய்தி வெளியானது.
இதுகுறித்து அறிய இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்தியச் செயலாளர் (BEFI) கே.கிருஷ்ணனிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:
இந்தியன் வங்கி வரும் மார்ச் 1 முதல் 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனையை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறதே. உண்மையா?
வங்கிப் பரிவர்த்தனையில் அல்ல ஏடிஎம்மில் நோட்டுகளை வைப்பதில் புதிய முடிவெடுத்துள்ளோம்.
ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளை வைக்கக்கூடாது என முடிவெடுக்க என்ன காரணம்?
ஏடிஎம்களில் பொதுவாகப் பணம் எடுப்பவர்கள் 4 ஆயிரம், 6 ஆயிரம் என எடுத்தால் முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளே வரும். இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் வந்து சில்லறை கேட்கின்றனர். வங்கியின் அடிப்படை நோக்கமே வங்கி வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனைக்காக வங்கியைப் பயன்படுத்துவதைக் குறைப்பதே. அதற்காகத்தான் ஏடிஎம்கள் கொண்டுவரப்பட்டன.
தற்போது என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது?
ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளே பெரும்பாலும் வருவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். சில்லறைக்காக அலையும் நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்க இனி இந்தியன் வங்கி ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்படாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்தியன் வங்கி ஏடிஎம்களில் 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே நிரப்பப்படும். 2000 ரூபாய் நோட்டுகள் உள்ள டிரே நிரப்பப்படாது என முடிவு. இதைத்தான் திரித்துச் சொல்கிறார்கள்.
இவ்வாறு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்தியச் செயலாளர் (BEFI) கிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT