Last Updated : 21 Feb, 2020 02:53 PM

 

Published : 21 Feb 2020 02:53 PM
Last Updated : 21 Feb 2020 02:53 PM

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் கிரண்பேடி; எம்எல்ஏ தேர்தலில் கூட வெல்ல முடியாதவர்: புதுச்சேரி அமைச்சர் விமர்சனம்

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.

புதுச்சேரி

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்தான் கிரண்பேடி. அவர் ஒரு எம்எல்ஏ தேர்தலில் கூட வெல்ல முடியாதவர் என புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சுற்றுலா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாம் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கும் இடையில் மோதல் வலுத்து வருகிறது. துணைநிலை ஆளுநரும், அமைச்சரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருவது வழக்கம். ஏனாமுக்குக் கிரண்பேடி சென்றபோது கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பையும் தெரிவித்தார்.

இச்சூழலில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (பிப்.21) சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது அறையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கடந்த 2017-ம் ஆண்டு 'சென்டாக்' மூலம் நடைபெற்ற சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும் இதில் அதிகாரிகள் தவறு செய்துள்ளதாகவும் கூறி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் மீது எந்தத் தவறும் இல்லை என சிபிஐ தற்போது கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு கிரண்பேடி என்ன பதில் கூறப் போகிறார்?

சிபிஐ அடையாளம் காட்டி கிரண்பேடி தொடர்ந்து அதிகாரிகளை மிரட்டும் வேலையைச் செய்து வருகிறார்.

கிரண்பேடி: கோப்புப் படம்.

நேர்மையான தமிழ் பேசும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது கிரண்பேடி தேவையில்லாமல் குற்றச்சாட்டைக் கூறி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார். பாதிக்கப்பட்ட அதிகாரிகள் குடியரசுத் தலைவருக்குப் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு ஏனாமில் கோதாவரி ஆற்றில் வெள்ளத் தடுப்புக்காக சுவர் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. 137.28 கோடி செலவில் சுவர் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஆளுநர் கிரண்பேடி தடை போட்டுள்ளார். இது மத்திய அரசின் திட்டம். கிரண்பேடியைப் போல் பல பேரைச் சந்தித்துள்ளேன். அவரை விட நேர்மையானவன் நான்.

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்தான் கிரண்பேடி. ஒரு எம்எல்ஏ தேர்தலில் கூட வெல்ல முடியாதவர். ஓராண்டுக்கு மேலாக ஆளுநர் மாளிகையில் மக்கள் திட்டங்களுக்கான கோப்புகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. மக்கள் பிரச்சினை, எனது துறைகளில் தலையிட்டு பணிகளை நிறுத்தி வரும் கிரண்பேடி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளேன். ஒரு வாரத்தில் தாக்கல் செய்வேன்.

கிரண்பேடி சொன்னால் அது சட்டம் என நினைத்துக்கொள்கிறார். கிரண்பேடிக்கு ஒரு சட்டம், முதல்வர் நாராயணசாமிக்கு ஒரு சட்டம் என்றெல்லாம் கிடையாது. சட்டம் அனைவருக்கும் சமம். மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்து பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறார். அதனால் மாநிலத்திற்கு என்ன பயன்? கிரண்பேடி பதவியேற்றது முதல் இதுவரை மாநிலத்திற்கு எதுவும் செய்யவில்லை.

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அளித்துள்ளேன். விளக்கமளிக்கவில்லை எனில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவேன். அவர் காங்கிரஸ் உறுப்பினர் என்று பார்க்க மாட்டேன். அவரது செயல்பாட்டுக்கு மதிப்பெண் மைனஸில் கூட போட முடியாது. புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத எம்பிபிஎஸ் இடங்களைப் பெற சட்டம் கொண்டு வரவுள்ளோம்" .

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

இச்செய்தியாளர் சந்திப்பின்போது ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பணியாளர், செய்தியாளர்களுடன் அமர்ந்திருந்தார். செய்தியாளர் சந்திப்பின்போது ஆளுநருக்கு எதிரான அமைச்சரின் பேச்சை செல்போனில் பதிவு செய்தபடி இருந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த அமைச்சரின் அலுவலகத் தரப்பினர் அவரை விசாரித்து அங்கிருந்து வெளியேற்றினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x