Published : 21 Feb 2020 01:58 PM
Last Updated : 21 Feb 2020 01:58 PM
கிரீமிலேயர் வரம்பைக் கணக்கிடுவதில் ஓபிசி பிரிவினரின் ஊதியத்தையும் வருவாய்க் கணக்கில் சேர்ப்பது சமூக அநீதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் இன்று (பிப்.21) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு 'கிரீமிலேயர்' வரம்பைக் கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்த்துக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 'கிரீமிலேயரை' காட்டி பிற பிற்படுத்தப்பட்டோருக்கு ஏற்கெனவே இட ஒதுக்கீடு மறுக்கப்படும் நிலையில், இந்தத் திட்டம் கூடுதல் சமூக அநீதியை இழைக்கும்.
மத்திய அரசின் கல்வி - வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளபோதிலும், அது நிபந்தனையின்றி வழங்கப்படுவதில்லை. மாறாக, ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கும் கூடுதலாக வருவாய் ஈட்டும் குடும்பத்தினர் 'கிரீமிலேயர்' என்று கருதப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
'கிரீமிலேயர்' வரம்பைக் கணக்கிடும்போது, விவசாயம் மற்றும் ஊதியம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும்தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று 1993-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த குறிப்பாணையை செயல்படுத்துவதில் மத்திய அரசு அதிகாரிகள் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்தினர்.
அலுவலக குறிப்பாணையின்படி மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் பிற பிற்படுத்தப்பட்டோரின் ஊதியத்தை 'கிரீமிலேயரை' கணக்கிடுவதற்கு மத்திய அரசு சேர்ப்பதில்லை. அதேநேரத்தில் வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற பிற்படுத்தப்பட்டோரின் ஊதியம் 'கிரீமிலேயரை' கணக்கிடுவதில் சேர்க்கப்பட்டது.
அதனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கணவன், மனைவி மாதம் ரூ.33 ஆயிரத்து 500 ஊதியம் கிடைக்கும் பொதுத்துறை நிறுவனப் பணிகளில் இருந்தால் கூட, அவர்கள் 'கிரீமிலேயர்களாக' கருதப்பட்டு, அவர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த அபத்தனமான நடைமுறையால் 2012-ம் ஆண்டில் 12 பேருக்கும், 2015-ம் ஆண்டில் 11 பேருக்கும், 2017-ம் ஆண்டில் 29 பேருக்கும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகள் மறுக்கப்பட்டன. இவர்கள் தவிர நூற்றுக்கணக்கான பிற்படுத்தப்பட்டோருக்கு பிற குடிமைப்பணிகள் மறுக்கப்பட்டன.
இது குறித்த வழக்குகளை விசாரித்த சென்னை மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்கள், மத்திய அரசு கடைப்பிடிக்கும் புதிய முறை பாரபட்சமானது என்றும், அதைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த காலங்களில் ஆணையிட்டன.
அதனடிப்படையில் பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் குடும்பங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் களைய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுதான் இப்படி ஒரு அபத்தமான பரிந்துரையை அளித்துள்ளது. ஒரு பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்குவதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, அதை செய்யாமல் அனைத்துத் தரப்பினருக்கும் அநீதியை இழைத்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களின் ஊதியம் 'கிரீமிலேயரை' தீர்மானிக்கக் கணக்கில் கொள்ளப்படாது என்ற ஒற்றை ஆணை அனைத்து பாகுபாடுகளையும், அநீதிகளையும் தீர்த்து விடும்.
மாறாக, இப்போது வருமானவரி கணக்கிடுவது போன்று 'கிரீமிலேயர்' வருவாய் வரம்பு கணக்கிடுவது ஆபத்தானது. வல்லுநர் குழு பரிந்துரையின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் மாத வருமானம் ரூ.67 ஆயிரமாக இருந்தால் அக்குடும்பத்தின் குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு விடும். இதைவிட மோசமான சமூக அநீதி எதுவும் இருக்க முடியாது.
மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து 3 பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மத்திய அரசு பணிகளிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அளவு 10 விழுக்காட்டைக் கூட தாண்டவில்லை. அதற்கான காரணிகளில் முக்கியமானது 'கிரீமிலேயரைக்' காட்டி இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது தான்.
'கிரீமிலேயர்' வரம்பை ஆண்டுக்கு ரூ.12 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதை ஏற்காத மத்திய சமூக நீதி அமைச்சகம், இட ஒதுக்கீட்டை தடுக்கும் வகையிலான பரிந்துரையை மட்டும் ஏற்பது நியாயமல்ல.
எனவே, மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூக நீதியை நிலைநிறுத்த, 1) ஊதியத்தை கணக்கில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது, 2) 'கிரீமிலேயர்' வரம்பை அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.11 லட்சமாக உயர்த்த வேண்டும் என வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், அதை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும், 3) பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு 'கிரீமிலேயர்' எந்த அளவுக்குத் தடையாக உள்ளது என்பதை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் ஆய்வு செய்து, இட ஒதுக்கீட்டுக்கு 'கிரீமிலேயர்' தடையாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் 'கிரீமிலேயரை' முழுமையாக நீக்க மத்திய அரசு முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT