Published : 21 Feb 2020 11:49 AM
Last Updated : 21 Feb 2020 11:49 AM
கரும்பு நிலுவைத் தொகையை உடனே தரக்கோரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முன் விவசாயிகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் தொடங்கியது.
அப்போது, கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான தரணி சர்க்கரை ஆலையால் கொள்முதல் செய்யப்பட்ட கரும்பு நிலுவைத் தொகை ரூ.14 கோடியை 2000 விவசாயிகளுக்கும் உடனடியாக வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் முன் அமர்ந்து அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில், "கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கப்படாததால் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களில் வாங்கிய பயிர்க் கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் வட்டிச் சலுகையும் பெற முடியவில்லை.
அதோடு கடனை செலுத்தாததால் வங்கியிலிருந்து விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் பணம் கொடுக்காத சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட சுமார் இரண்டாயிரம் விவசாயிகளுக்கும் கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனே பெற்றுத் தர வேண்டும்" என வலியுறுத்தினர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT