Published : 20 Feb 2020 04:24 PM
Last Updated : 20 Feb 2020 04:24 PM

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. பல்வேறு வாதங்கள், சட்ட மசோதா நிறைவேற்றம் உள்ளிட்ட பரபரப்பான கூட்டம் இன்று நிறைவு பெற்றது. தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் பேரவையை ஒத்தி வைத்தார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற்றது. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த 14-ம் தேதி இந்த ஆட்சிக்கான கடைசி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

துணை முதல்வர் ஓபிஎஸ் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். சுமார் 3 மணிநேரம் 20 நிமிடங்கள் பட்ஜெட் உரை ஆற்றினார். பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வந்தாலும் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது.

பட்ஜெட் மீதான உரை தொடங்கும் நாளன்றே சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் வெடித்தது. சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானமும் இந்தக் கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை.

சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி நேற்று தமிழகம் முழுதும் இஸ்லாமியர்கள் பெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். ஆனாலும், எந்தவிதத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

9,10-ம் வகுப்புகளில் இடைநிற்றல் தமிழகத்தில் 2016-17-ல் 8 சதவீதமாக இருந்தது 2017-18-ல் 16 சதவீதமாக 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் கூறியதை எடுத்துக்காட்டி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் ''2017-18-ல் இடைநிற்றல் சதவீதம் 3.6 சதவீதம்தான்.

தமிழக அரசின் புள்ளிவிவரம்தான் சரியானது. 2017-18 புள்ளி விவரத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசு கொடுத்த புள்ளி விவரத்துக்கும் மாநில அரசு கொடுத்த புள்ளிவிவரத்துக்கும் இதேபோல்தான் வித்தியாசம் உள்ளது.இடைநிற்றல் புள்ளிவிவரம் முன்பு ஆசிரியர்கள் மூலம் எடுக்கப்பட்டது. தற்போது ஆன்லைன் மூலமாக எடுக்கப்படுகிறது'' என்று விளக்கம் அளித்தார்.

நிதி விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்படும், குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்தார்.

உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.1500-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தும் அறிவிப்பு, ஹஜ் பயணிகளுக்காக சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் அமைப்பு. ஜெயலலிதா பிறந்தநாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என்கிற அறிவிப்புகளை முதல்வர் 110- விதியின் கீழ் அறிவித்தார்.

எழுவர் விடுதலைக்குறித்து துரைமுருகன் கேள்விக்கு, “ பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும், ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது ”. என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற திமுகவின் கோரிக்கை ஏற்கப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதிலும் மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பவில்லை என திமுக வெளிநடப்பு செய்தது.

இதேபோன்று இந்தக் கூட்டத்தொடரில் என்பிஆருக்கு எதிராக சில சரத்துகளை நீக்கும்படி தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது அதுவும் நடக்கவில்லை. அதேபோன்று ஓபிஎஸ் தலைமையில் 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் திமுக எழுப்பிய கேள்வியும் நிராகரிக்கப்பட்டது.

இதேபோன்று மது விற்பனை மூலம் அதிக வருவாய் வருவது குறித்த கேள்விக்கு அமைச்சர் தங்கமணி அளித்த பதில் சம்பந்தமாக மிக நீண்ட காலத்துக்குப் பின் 2 தொலைக்காட்சி ஊடகங்கள் மீது உரிமை மீறல் கொண்டுவரப்பட்டது.

இலங்கைத் தமிழருக்கான இரட்டைக் குடியுரிமை குறித்து தவறான தகவலைத் தந்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது தங்கம் தென்னரசு கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்சினைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நாயகன் என ஓபிஎஸ் ஏன் அழைக்கப்படுகிறார், மாடு பிடி வீரரா? என துரைமுருகன் கேட்க, அவர் அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்ததால் அழைக்கப்படுகிறார், துரைமுருகன் ஆசைப்பட்டால் புதுக்கோட்டை ஜல்லிக்கட்டுக்கு வந்து பார்க்கலாம், வேண்டுமானால் காளையை அடக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது சுவாரஸ்ய நிகழ்வாக இருந்தது.

சட்டப்பேரவையில் சிஏஏ குறித்து முதல்வர் பேசிய பேச்சும் சர்ச்சையானது. இஸ்லாமியர்களைத் திமுக தூண்டிவிடுவதாகப் பேசிய அவர், சிஏஏவால் பாதிக்கப்பட்டதாக தமிழகத்தில் ஒரு சிறுபான்மையினரைக் காட்டுங்கள் என சவால் விட்டது இஸ்லாமியர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு வங்கி அரசியலுக்காக சிஏஏ, என்பிஆரைக் கையில் எடுக்கிறீர்கள் என திமுக மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. வெளிநடப்பு செய்த பின்னர் பேசிய ஸ்டாலின், ''பாஜக அரசைக் கண்டு அதிமுக அஞ்சி நடுங்கி ஆட்சியைக் காப்பாற்ற இந்த மசோதாக்களுக்கு வக்காலத்து வாங்குகிறது. மக்கள் மீது அக்கறையே இல்லை'' என விமர்சித்தார்.

பல்வேறு பிரச்சினைகளுடன் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. அடுத்த கூட்டம் குறித்து தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் பேரவையஒ ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x