Published : 20 Feb 2020 03:18 PM
Last Updated : 20 Feb 2020 03:18 PM
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் உதவி காவல் ஆய்வாளருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் காளிதாஸ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் அருள்தாஸ் என்பவர் அளித்த புகாரின் பேரில் சையது முகமது என்பவர் விசாரணைக்காக 14.10.2014-ல் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டார். அப்போது சையது முகமது மது போதையில் இருந்தார். என் அறையில் மேஜையில் இருந்த கத்தியை எடுத்து என்னைத் தாக்க முயன்றார். இதனால் என்னை தற்காத்துக்கொள்ள துப்பாக்கியால் சுட்டேன். இதில் அவர் காயமடைந்தார். மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். இறுதியில் எனக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் 14.11.2019-ல் உத்தரவிட்டது.
நான் முன்விரோதம் காரணமாக சையது முகமதை சுடவில்லை. என்னை தற்காத்துக்கொள்ளவே துப்பாக்கியால் சுட்டேன். எனவே ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை தண்டனையை ரத்து செய்து ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பின்னர் சம்பவத்தின் போது சையது அகமது மதுபோதையில் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் திருச்சியில் தங்கியிருந்து தினமும் நீதித்துறை நடுவர் முன்பு கையெழுத்திட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT