Published : 20 Feb 2020 12:07 PM
Last Updated : 20 Feb 2020 12:07 PM

டிஎன்பிஎஸ்சி  போட்டித் தேர்வுகள் சென்னைக்கு மாற்றம்; ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர்: ராமதாஸ் 

தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க கண்காணிப்பையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வலுப்படுத்த வேண்டுமே தவிர, மாணவர்கள் அவர்களுக்கு அருகிலுள்ள மையங்களில் தேர்வு எழுதும் வாய்ப்புகளைப் பறிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் தொல்லியல் அலுவலர் பணிக்காக வரும் 29-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தப்படவிருந்த போட்டித் தேர்வுகள் சென்னைக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும், சென்னையில் மட்டுமே இத்தேர்வுகள் நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சியின் இம்முடிவு ஏழை மாணவர்களை கடுமையாகப் பாதிக்கும்.

தொல்லியல் அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுகள் வரும் 29-ம் தேதி சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது சென்னை தவிர்த்த பிற தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், தமிழ்நாடு கால்நடை மருத்துவத் துறையில் காலியாக உள்ள 1,142 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் வரும் 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சாவூர் ஆகிய 7 தேர்வு மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அத்தேர்வுகளும் சென்னை மையத்தில் மட்டும்தான் நடைபெறும் என்றும், மற்ற 6 தேர்வு மையங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற தொகுதி 4, தொகுதி 2ஏ தேர்வுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் நடைபெற்ற தேர்வுகளில் விடைத்தாள்கள் சென்னைக்குக் கொண்டு வரப்படும்போது திருத்தப்பட்டு, மோசடி செய்யப்பட்டதாகத் தெரியவந்த நிலையில், அதேபோன்ற முறைகேடுகள் மீண்டும் நடந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன்தான் இந்த முடிவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இரு போட்டித் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களை ரத்து செய்து விட்டு, சென்னையில் மட்டும் போட்டித் தேர்வுகளை நடத்தும் தேர்வாணையத்தின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். ஆனால், அதன் விளைவுகள் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை ஆணைய நிர்வாகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த இரு போட்டித் தேர்வுகளையும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுதக்கூடும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் சென்னைக்கு வந்து தேர்வு எழுதிவிட்டுச் செல்வதானால், அதற்காக ஒரு நாள் முன்னதாகவே சென்னைக்கு வர வேண்டும்; சென்னையில் ஏதேனும் விடுதியில் தங்க வேண்டும். இதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும். இது கிராமப்புற, ஏழை மாணவர்களால் சாத்தியமாகுமா? என்பதை பணியாளர் தேர்வாணையம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, சென்னைக்கு வந்து செல்வதால் ஏற்படும் நேர விரயம், மன உளைச்சல் ஆகியவையும் மாணவர்களின் தேர்வுத் திறனை பாதிக்கும். போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க வேண்டும் என்ற ஆணையத்தின் எண்ணம் வரவேற்கத்தக்கதே.

அதற்காக கண்காணிப்பையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வலுப்படுத்த வேண்டுமே தவிர, மாணவர்கள் அவர்களுக்கு அருகிலுள்ள மையங்களில் தேர்வு எழுதும் வாய்ப்புகளைப் பறிக்கக்கூடாது.

எனவே, கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர், தொல்லியல் அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுகளை ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x