Published : 20 Feb 2020 07:58 AM
Last Updated : 20 Feb 2020 07:58 AM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்- பேரவையில் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை

சென்னை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்று சட்டப்பேரவையில் முதல்வர்பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற விவாதம்:

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் பிரிவின்படி சட்டப்பேரவைக்கே அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இதை அறிந்தும் பேரறிவாளன் விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக உணர்கிறேன்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாறுபட்ட கருத்தும் இல்லை. அதனால்தான், உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடுத்தவழக்கில், ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பளித்ததும், காலதாமதம் செய்யாமல், தமிழக அமைச்சரவையை கூட்டி, 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் தீர்மானத்தின் மீது ஆளுநர் இந்தகாலக்கெடுவுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் கூறவில்லை; அரசியலமைப்புச் சட்டத்திலும் குறிப்பிடவில்லை. இப்போது கடைசியாக வந்த வழக்கு தீர்ப்பில், ஆளுநர் என்னமுடிவு எடுக்கிறார் என்று கேட்டுசொல்லும்படிதான் அரசு வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது. முதல்வர் அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநரின் நல்ல முடிவை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் ஏன் முடிவெடுக்கவில்லை என்று கேள்வி கேட்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. நீங்கள் கேள்வி கேட்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆளுநரிடம் இதை வலியுறுத்தும் சூழலில் நீங்கள் இருக்கிறீர்களா? என்ற அடிப்படையில்தான் துணைத் தலைவர் கூறினார்.

அமைச்சர் சண்முகம்: மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது; ஆளுநரை நீங்கள் கேட்கலாம் என்றோ, காலக்கெடுவுக்குள் நீங்கள் செய்யலாம் என்றோ நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை. அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆளுநரிடம் கேட்டு கூறுங்கள் என்றுதான் தெரிவித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில்..

துரைமுருகன்: கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். மனிதாபிமான அடிப்படையில், அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் ஆளுநரிடம் பேசினால் முதல்வரை நானே பாராட்டுவேன்.

முதல்வர் பழனிசாமி: அவர்கள் மீது அக்கறை இருப்பதால்தான் சிறையில் வாடிக் கொண்டிருந்தவர்களை பரோலில் விட்டோம். அவர்களை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம். எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டுதீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்.

துரைமுருகன்: உச்ச நீதிமன்றம் ஆளுநரிடம் சொல்லச் சொல்லியுள்ளது. தருமபுரி வழக்கு...

முதல்வர் பழனிசாமி: தருமபுரி வழக்கு வேறு; இந்த வழக்கு வேறு. இரண்டு வழக்குக்கும் முடிச்சு போட வேண்டாம். எந்தெந்த தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் விதிமுறை வகுத்துள்ளது. அதைப் பின்பற்றிதான் விடுதலை செய்யப்படுகிறது.

துரைமுருகன்: மனிதாபிமான அடிப்படையில், தயவு செய்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுங்கள். 7 பேரும் வெளியில் வந்தால் தமிழகத்துக்கு நிம்மதி.

அமைச்சர் சண்முகம்: தருமபுரி பஸ் எரிப்பு வழக்குகுறித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் கூறுகிறார். எந்த உள்நோக்கத்தோடும், அவர்கள் அதிமுகவினர் என்பதற்காகவும் விடுவிக்கவில்லை. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறைவாசம் முடித்தவர்களை விடுவிக்க தகுதிகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்கப்பட்டார்கள்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x