Published : 20 Feb 2020 07:25 AM
Last Updated : 20 Feb 2020 07:25 AM

வைரஸ் அறிகுறிகளுடன் சென்னை துறைமுகம் வந்த 2 சீனர்களுக்கு கோவிட்-19 காய்ச்சல் இல்லை- மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது

சென்னை

சீனாவில் இருந்து சரக்கு கப்பலில் சென்னை துறைமுகம் வந்த 2 சீனர்களுக்கு கோவிட்-19 காய்ச்சல் (கரோனா வைரஸ்) அறிகுறிகள் இருந்ததால், அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில், இருவருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதியானது.

உலகையே அச்சுறுத்தி வரும்கோவிட்-19 காய்ச்சல் சீனாவைதொடர்ந்து பல்வேறு நாடுகளுக்குவேகமாக பரவி வருகிறது. இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டும் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சீனா மற்றும் வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அனைத்து விமான நிலையங்களிலும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை நடத்துகின்றனர்.

தொடர் கண்காணிப்பு

இதன்படி, இதுவரை தமிழகம்வந்த சுமார் 50 ஆயிரம் பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இதற்கிடையில், 2 வாரத்துக்கு முன்பு சென்னை அரசு பொது மருத்துவமனையில் 8 சீனர்களும் ஸ்டான்லி மருத்துவமனையில் 2 சீனர்களும் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து, நடந்த பரிசோதனையில் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 10 சீனர்களும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களுக்கான மருத்துவ கட்டுப்பாடுகள் முற்றிலும் விலக்கப்பட்டன. இதேபோல், சீனாவில் இருந்து வந்த தமிழர்கள் 5 பேரும் பரிசோதனைக்கு பின்னர் வீடு திரும்பினர்.

இந்நிலையில், சீனாவில் உள்ள டியான்ஜின் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட எம்.வி.மேக்னட் என்ற சரக்கு கப்பல் சென்னை துறைமுகத்துக்கு கடந்த 18-ம்தேதி வந்தது. இதில் வந்த அதிகாரிகள், ஊழியர்கள் 19 பேரைதுறைமுக மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில்,சீனாவைச் சேர்ந்த 2 அதிகாரிகளுக்கு வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பது தெரியவந்து. இதையடுத்து, 2 பேரின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து அவர்கள் இருவரும் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

மீதமுள்ள 17 பேரும் கப்பலுக்குள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று வந்த பரிசோதனை முடிவில் இருவருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

பாதிப்பு இல்லை

இருப்பினும் சென்னை வந்த 2 சீனர்களுக்கு வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக அரசு அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது:

2 சீனர்களுக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இதுவரை 12 சீனர்கள் உட்பட 46 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை. அதனால், பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x