Published : 19 Feb 2020 08:12 PM
Last Updated : 19 Feb 2020 08:12 PM

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்ற தடையை மீறி பேரணி:  சென்னையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய பேரணியில் சுமார் 30 ஆயிரம் பேர்வரை பங்கேற்றனர். போராட்டம் எவ்வித அசம்பாவிதமுமின்றி அமைதியாக நடந்தது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், சட்டப்பேரவையில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டது. தடியடி நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், சிஏஏவை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் அங்கேயே இரவு, பகல் பாராமல் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பேரவையில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.19 அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சட்டப்பேரவையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தன.

சிஏஏவுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி பிப்.19 சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை 23 முஸ்லிம் அமைப்பினர் நடத்தப்போவதாக அறிவித்தனர். சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பேரணி மற்றும் போராட்டம் அமைதியான முறையில் கட்டாயம் நடக்கும் எனத் தெரிவித்தனர்.

சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் கலைவாணர் அரங்கம் அருகே கூடுவதாக அறிவித்தனர். போராட்டத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து இஸ்லாமியர்கள் திரண்டுவருவதால் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

இன்று(பிப்.19) காலை சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் காலை 8 மணி முதலே இஸ்லாமியர்கள் குவியத் தொடங்கினர். கலைவாணர் அரங்கம் எதிரே ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர். 10.30 மணியளவில் அங்கிருந்து பேரணி தொடங்கியது. இதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 23 அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

பேரணியில் சென்றவர்களில் பலரும் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். 'நோ சிஏஏ', 'நோ என்பிஆர்', 'நோ என்ஆர்சி' ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்திச் சென்றனர். பனியன்களையும் அணிந்திருந்தனர். பேரணியில், ‘இந்தியா வாழ்க, இஸ்லாம் வாழ்க’, ஆகிய முழக்கங்களும், பெரியார், அண்ணா ஆகியோருக்கு ஆதரவான முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

வாலாஜா சாலையில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் எதிரே இரண்டு லாரிகளை நிறுத்தி, தற்காலிக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் நின்று தலைவர்கள் உரையாற்றினர். பேரணி அண்ணா சாலை சிம்சன் தொடங்கி சாரி சாரியாக கூட்டம் வந்துக்கொண்டே இருந்தனர்.

பேரணி அந்த மேடை அருகே வந்ததும் நிறைவடைந்தது. அப்போது, மேடையில் பேசிய இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள், ‘நீதிமன்றம் தடை விதித்து இருப்பதால் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடத்தப்படவில்லை. இருந்தாலும் கோரிக்கை நிறைவேறும் வரை எங்களின் போராட்டம் தொடரும்’ என்றனர். அதைத் தொடர்ந்து அனைவரும் தேசியகீதம் பாட பேரணி முடிவடைந்தது.

பேரணியில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் பெண்கள் மட்டும் 3000 லிருந்து 5000 பேர் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. பேரணியின்போது ஆங்காங்கே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை பேரணியில் வந்தவர்களே சரி செய்தனர். எங்கும் சிறு அசம்பாவிதம் நடக்காமல் கூட்டத்தில் வந்தவர்களே தொண்டர்களை போட்டு பார்த்துக்கொண்டனர்.

ஆம்புலன்ஸ் வந்தபோது அது செல்வதற்கும் வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். மதியம் பேரணி முடிந்து கலைந்து செல்ல தொடங்கினர். அப்போது வாலாஜா சாலை, அண்ணா சாலை இணைப்புப் பகுதி அருகே கும்பலாக சில இஸ்லமியர்கள் நின்றிருந்தனர். அவர்கள் மறியல் எதுவும் செய்துவிடக்கூடாது என போலீஸார் கலைந்துப்போகச் சொன்னார்கள்.

ஆனால் அவர்கள் கலையவில்லை. இதையடுத்து அங்கு திருவல்லிக்கேணி துணை ஆணையர் நேரில் வந்து கலைந்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டார். கும்பலாக அனைவரும் நின்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மமக தலைவர் ஜவாஹிருல்லா அவர்களிடம் பேசி கலைந்துப்போகச் சொன்னார் இதையடுத்து கூட்டம் கலைந்தது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலையும் பேரணியில் வந்த இஸ்லாமியர்கள் போலீஸாருடன் சேர்ந்து சரி செய்தனர்.

பேரணிக்கு 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப்ப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பேரணியைத் தொடர்ந்து வாலாஜா சாலை முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

5 ட்ரோன் கேமராக்கள், 35 வீடியோ கேமராக்கள், 100 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பேரணி முழுமையாக வீடியோ எடுக்கப்பட்டது. வாலாஜா சாலையில் மட்டும் சுமார் 5 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டனர். 3-க்கும் மேற்பட்ட வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் புறக்காவல் நிலையமும் அமைத்து இருந்தனர்.

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் காலை 9.30 மணியளவில் வாலாஜா சாலைக்கு நேரில் வந்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, துணை ஆணையர்கள் தர்மராஜன், பிரபாகர், பகலவன், கலைச்செல்வன், ஷசாங்சாய் ஆகியோர் காலை முதல் பேரணி முடியும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர்.

வாலாஜா சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும், ஏராளமான இஸ்லாமியர்கள் பேரணியாக வந்ததாலும் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அண்ணா சாலையுடன் இணையும் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தலைமைச் செயலகத்தை நோக்கி திடீரென போராட்டக்காரர்கள் செல்லத் தொடங்கினால், அதை தடுக்கும் வகையில், மெரினா கடற்கரை சாலை, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, நேப்பியர் பாலம், தீவுத்திடல், சிவானந்தா சாலையில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

சாலையை மறித்து முள் வேலியுடன் கூடிய சாலைத்தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. தலைமை செயலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 6 மணியில் இருந்தே 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

மிகுந்த பதற்றத்துடன் போராட்டம் நடந்த சூழ்நிலையில் பெரிய அளவில் அமைதியாக நடந்து முடிந்தது. போராட்டம் முடிந்து கலைந்துச் செல்லும்போது போராட்டக்காரர்களே பல இடங்களிலில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தியதால் சில மணி நேரத்தில் போக்குவரத்து சீரடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x