Published : 19 Feb 2020 03:25 PM
Last Updated : 19 Feb 2020 03:25 PM
முரசொலி நில விவகாரம் தொடர்பாக துணைத் தலைவர் முருகன்தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என ஆர்வம் காட்டுவது ஏன் எனக் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், வழக்கு குறித்து தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பதில் அளிக்க உத்தரவிட்டது.
'அசுரன்' படத்தை ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்தினார். அதற்கு பதிலளித்த ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளது எனத் தெரிவித்தார். அதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார், நிரூபிக்காவிட்டால் நீங்கள் விலகத் தயாரா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது. அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக செயலாளர்களில் ஒருவரான சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பியது.
சம்மனுக்கு ஆஜரான முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி பல்வேறு கேள்விகளை ஆணையம் முன் வைத்தார். நிலம் பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க சீனிவாசன், அரசுத் தலைமைச் செயலர் இருவரும் அவகாசம் கோரினர்.
பின்னர் இதுகுறித்துப் பேட்டி அளித்த ஆர்.எஸ்.பாரதி, சீனிவாசன் மீது அவதூறு வழக்குத் தொடர்வோம் என்று தெரிவித்தார். பின்னர் ஆணையம் ஜனவரி 7-ம் தேதி ஸ்டாலின் ஆஜராக வேண்டுமென மீண்டும் சம்மன் அனுப்பியது.
இதற்குத் தடை விதிக்க வேண்டுமென்று கோரி முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு வந்தது.
முரசொலி பஞ்சமி நில விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன் நேரில் ஆஜராக வேண்டியதில்லை. முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆவணப் பட்டியல் மட்டும் தாக்கல் செய்தால் போதுமானது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இந்த விவகாரத்தை விசாரிப்பதிலிருந்து அதன் துணைத் தலைவர் முருகன் விலகியிருக்க வேண்டுமென்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆணையத் தலைவரிடத்தில் ஆவணப் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞரர், ''முரசொலி விவகாரம் தொடர்பாக துணைத் தலைவர் முருகன் விசாரிக்கக் கூடாது என நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்'' என வாதிட்டார்.
திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் தலைவரிடம் முரசொலி நிலம் பட்டா நிலம்தான் என்பது குறித்தான ஆவணப் பட்டியல் தாக்கல் செய்துள்ளோம்.
தற்போது ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் முருகன் கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டவர். பாஜகவின் எஸ்.சி., எஸ்.டி. அணியின் தேசியச் செயலாளராக இருந்தவர். அவர் தற்போது தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.
முரசொலி நில விவகாரம் தொடர்பாக முருகன் விசாரணை மேற்கொண்டால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த விசாரணை மேற்கொள்ளப்படவே வாய்ப்பு அதிகம்” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபது சி.வி.கார்த்திகேயன், “ஆணையத் துணைத் தலைவர் முருகன்தான் முரசொலி அறக்கட்டளை வழக்கை விசாரிக்க வேண்டும் என ஆர்வம் காட்டுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கில் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரை இணைக்குமாறும், முரசொலி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்த மனுவிற்குப் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT