Published : 19 Feb 2020 01:22 PM
Last Updated : 19 Feb 2020 01:22 PM
ஓசிஐ அடையாள அட்டையையும், இரட்டைக் குடியுரிமையையும் குழப்பிக்கொண்டு அமைச்சர் பாண்டியராஜன் ஒரு பதிலைச் சொன்னார் என்று திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.19) எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அமைச்சர் பாண்டியராஜன் மீதான அவை உரிமை மீறல் தொடர்பான விவாதத்துக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின், திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் சட்டப்பேரவையைத் தவறாக வழிநடத்துகிறார். இந்த அவைக்கு தவறான தகவல்களை அளித்திருக்கிறார். இலங்கைத் தமிழர் நலனுக்கு அது விரோதமாக இருக்கிறது எனக்கூறி, நேற்று அவையில் அமைச்சர் பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வந்தோம்.
அதில், நாங்கள் எழுப்பிய மிக முக்கியமான 2 கேள்விகள், இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955-ன் படி, இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு எந்தவிதமான ஷரத்துகளும் இல்லாதபோது எதன் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது சாத்தியம் என எப்படித் தெரிவித்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினோம்.
அதேபோல, 1984-க்குப் பிறகு தமிழகம் வந்த இலங்கைத் தமிழர்கள் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேருக்கும் மேலாக, தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குங்கள் என நீதிமன்றத்தை அணுகியபோது, இந்தியக் குடியுரிமையை அவர்களுக்கு வழங்கக் கூடாது என தமிழக அரசு வாதம் செய்தது உரிமை மீறல் பிரச்சினையாகாதா எனக் கேள்வி எழுப்பினோம்.
இந்தக் கேள்விகளுக்கு அமைச்சர் நேரடியாக பதில் சொல்லாமல், இலங்கையில் நாங்கள் ஏராளமான வீடுகளைக் கட்டியிருக்கிறோம், அங்கே திரும்பிச் சென்றால் அவர்களுக்கு பல்வேறு வித சலுகைகள் கிடைக்கும் என, ஓசிஐ அடையாள அட்டையையும், இரட்டைக் குடியுரிமையையும் அவர் குழப்பிக்கொண்டு ஒரு பதிலைச் சொன்னார்.
மேலும், இரட்டைக் குடியுரிமை வழங்குவதென்பது அதிமுகவின் நிலைப்பாடு. இந்த அரசின் நிலைப்பாடு, என மீண்டும் இரட்டைக் குடியுரிமை விஷயத்தில் தவறான தகவல்களை அவையின் உரிமையை மீறக்கூடிய வகையில் தெரிவித்தார். இதனை விவாதிக்க சபாநாயகர் அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம்".
இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தவறவிடாதீர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT