Published : 19 Feb 2020 07:51 AM
Last Updated : 19 Feb 2020 07:51 AM
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், சுட்டிக்காட்டிய மாற்றங்கள், சீர்திருத்தங்களை ஆராய்ந்து விரைவில் செயல்படுத்துவோம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
அரசியல் களத்திலும் தேர்தல் பணிகளிலும் ஆற்ற வேண்டிய கடமைகளை திட்டமிட 4 நாட்கள் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் சென்றதைக் கண்டு நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் அரசியல் பாடம் பயின்ற நாம் அனைவரும் கட்சியின் உயர்வுக்காகவும் வெற்றிக்காகவும் முழுமூச்சுடன் பணியாற்ற உறுதி பூண்டிருப்பதை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவரிடமும் காண முடிந்தது. அழைப்பை ஏற்று பங்கேற்றதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியுடன் செயல்பட்டு வரும் அதிமுகவின் பணிகள் குறித்தும் அரசின் செயல்பாடுகள் குறித்தும் நிர்வாகிகள் அனைவரும் பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினீர்கள்.
அதிமுக தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கும் வகையில் நீங்கள் அனைவரும் தெரிவித்துள்ள கருத்துகளை பரிசீலித்து ஆக்கப்பூர்வமான வகையில் கட்சியை நடத்திச்செல்வோம் என உறுதி கூறுகிறோம்.
விரைவில் அமலுக்கு வரும்
ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளில் சிலர் சுட்டிக்காட்டியவாறு ஆங்காங்கே செய்யப்படவேண்டிய மாற்றங்கள், சீர்திருத்தங்களை தீர ஆராய்ந்து விரைவில் செயல்படுத்துவோம். ஜெயலலிதாவின் நல்லாசியோடு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பினை ஏற்றுள்ள நாங்கள், உங்கள் ஆலோசனைகளையும் அனுபவங்களையும் பெரிதும் மதிக்கிறோம்.
கழகத்தின் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வரும் நீங்கள் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கழகப் பணிகள் குறித்து நாங்கள் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் கட்சியின் நன்மைக்கும் தொண்டர்களின் அரசியல் பயணத்துக்கும் பேருதவி செய்யும்.
தொண்டர்களுக்கு அழைப்பு
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை பொதுத்தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுக முழுமையான வெற்றியை ஈட்ட தேவையான அனைத்துப் பணிகளையும் அனைவரும் ஒன்றிணைந்து முழுமூச்சுடன் மேற்கொண்டு, வெற்றியை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம் என்று நீங்கள் உறுதி அளித்ததற்கு மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT