Published : 18 Feb 2020 05:55 PM
Last Updated : 18 Feb 2020 05:55 PM
தாயைப் பராமரிக்காத மகனிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான சொத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீட்டுக் கொடுத்தார்.
புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 5-ம் வீதியைச் சேர்ந்தவர் சாத்தையா. இவருடைய மனைவி காளியம்மாள். சில ஆண்டுகளுக்கு முன்பு சாத்தையா இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
மூத்த மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பின்னர், ரூ.2 கோடி மதிப்புள்ள வீடுடன் கூடிய இடத்தை காளியம்மாளிடம் இருந்து 2-வது மகன் தியாகராஜன் பெயர் மாற்றம் செய்துகொண்டதோடு, காளியம்மாளையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.
இதனால் உறவினர் வீடு, கோயில் போன்ற இடங்களில் காளியம்மாள் தங்கி இருந்தார். இந்நிலையில், தனது மகன் தன்னைப் பராமரிக்காததால், தனது பெயரில் இருந்த சொத்தை அவரிடம் இருந்து மீட்டுத் தருமாறு ஆட்சியர் அலுவலகத்தில் ஜன.6-ம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியிடம் காளியம்மாள் மனு அளித்தார்.
ஆட்சியரின் உத்தரவின்பேரில், இந்த மனுவை புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி விசாரணை செய்து, காளியம்மாளிடம் இருந்து தியாகராஜனுக்கு சொத்து மாற்றப்பட்ட உத்தரவை ரத்து செய்தார்.
இதற்கான ஆணையை, புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (பிப்.17) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் காளியம்மாளிடம் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி வழங்கினார். அந்த உத்தரவை காளியம்மாள் நெகிழ்ச்சியோடு பெற்றுச் சென்றார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தவறவிடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT