Last Updated : 18 Feb, 2020 02:31 PM

1  

Published : 18 Feb 2020 02:31 PM
Last Updated : 18 Feb 2020 02:31 PM

பெண்கள் வார்டில் வெற்றி பெற்ற ஆண்: வெற்றி செல்லாது என அறிவித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

கோப்புப்படம்

மதுரை

கரூர் அருகே பெண்கள் வார்டில் ஆண் ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற விவகாரத்தில் வார்டு உறுப்பினரின் வெற்றி செல்லாது என அறிவித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

கரூர் மாவட்டம் மதுகரையைச் சேர்ந்த ஏ.கிருஷ்ணமூர்த்தி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

"கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தலவாய் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 9 வார்டுகளில் 1, 4, 6, 7 மற்றும் 9 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவினருக்கும், 4 வார்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. நான் பொதுப்பிரிவினருக்கான 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். ஜன.11-ல் நடைபெற்ற ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் போட்டியிட்டு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். தொடர்ந்து துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றேன்.

இந்நிலையில், சித்தலவாய் ஊராட்சி 6-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும், அந்த வார்டில் போட்டியிட்டு நான் உறுப்பினராகத் தேர்வானதும், அதைத் தொடர்ந்து ஊராட்சி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என மாவட்டத் தேர்தல் அலுவலருமான மாவட்ட ஆட்சியர் பிப். 6-ல் உத்தரவிட்டார். உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்வதற்கு மாவட்டத் தேர்தல் அலுவலருக்கு அதிகாரம் கிடையாது.

என் வெற்றியை செல்லாது என அறிவித்து மாவட்டத் தேர்தல் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவைச் செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும். 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும். எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்"

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு டி.ராஜா, பி.புகழேந்தி அமர்வில் இன்று (பிப்.18) விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, "மனுதாரர் வேட்புமனுத் தாக்கல் செய்து, பரிசீலனைக்குப் பிறகு அவர் வேட்புமனு ஏற்கப்பட்டு, வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார். பின்னர் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். அதுவரை தேர்தல் ஆணையம் என்ன செய்தது?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் மனுதாரர் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டது மற்றும் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என மாவட்டத் தேர்தல் அலுவலர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

தவறவிடாதீர்

ஒரே நேரத்தில் கோட்சேவாகவும், காந்தியாகவும் நிதிஷ் குமார் எப்படி இருக்க முடியும்? பிஹாரின் வளர்ச்சி பற்றி விவாதிக்கத் தயாரா? பிரசாந்த் கிஷோர் கேள்வி

உச்ச நீதிமன்ற கண்டிப்பை அடுத்து தொலைத் தொடர்புத் துறைக்கு ரூ.14,697 கோடி செலுத்திய நிறுவனங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x