Published : 18 Feb 2020 02:21 PM
Last Updated : 18 Feb 2020 02:21 PM
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீதான சிபிஐ விசாரணை தொடர்கிறது. மாணவர் சேர்க்கையில் அன்றைய மேற்பார்வை அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டோராக வைக்கப்படாவிட்டாலும் கூட, கல்லூரிகளை மேற்பார்வையிட்டவர்கள் யார் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.
'சென்டாக்' மாணவர் சேர்க்கை விவகாரப் புகார் தொடர்பாக புதுச்சேரி அதிகாரிகள் 6 பேரை விடுவித்துவிட்டதாக சிபிஐ முடிவெடுத்துக் கடிதம் அனுப்பியதாக புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐயிடம் புகார் அளிக்க இந்திய மருத்துவக் கவுன்சிலைத் தூண்டியதாகவும், அதிகாரிகளை களங்கப்படுத்தியதாகவும் கிரண்பேடி மீது முதல்வர் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (பிப்.18) வெளியிட்ட வாட்ஸ் அப் தகவல்:
"ராஜ்நிவாஸ் அலுவலகம் மருத்துவச் சேர்க்கையில் உள்ள ரகசியச் செயல்பாட்டை உடைக்கும் வகையில் செயல்பட்டது.
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளால் மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்வதில் 2017-ல் ஏற்பட்ட ஊழலுக்கு எதிரான போராட்டம் சாதாரணமானது அல்ல. இது பல ஆண்டுகளாக மிக உறுதியுடன் இருந்து வந்தது. தகுதியானவர்களுக்கு நீதி தர ராஜ்நிவாஸ் இதை உடைத்தது.
பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகப்படியான சேர்க்கைக் கட்டணங்களைக் கோரியதாகவும், தகுதியிருந்தும் சேர்க்கைக்கு மறுப்பதாக பெற்றோர்களும் மாணவர்களும் ராஜ்நிவாஸுக்குத் தொடர்ந்து மனு அளித்ததன் மூலம் போராட்டம் தொடங்கியது. கல்லூரிகள் இடம் தர மறுத்ததால் பல இடங்களை பெற்றோர், மாணவர்கள் நாடி, கடைசிப் புகலிடமாக ராஜ்நிவாஸ் மாறியது.
நாங்கள் தளத்திற்குச் சென்றோம், குற்றச்சாட்டுகள் உண்மையா எனப் பார்த்து உறுதிப்படுத்தினோம். இதில் உள்ள ஒரு பெரிய ரகசிய வலையைப் பார்த்தோம். இது பல விஷயங்களில் அலட்சியம் மற்றும் அவர்களுக்குள் ஒத்துழைப்பின் ஊழல் சங்கிலியை அம்பலப்படுத்தியது.
தகுதியான மாணவர்களின் பட்டியல் சரி செய்யப்பட்டது. சட்டவிரோதமான பட்டியல் அகற்றப்பட்டது. நீதிமன்றத்தையும் நாடினோம். ஊழல் மற்றும் அலட்சியம் குறித்து மாணவர்கள் சிபிஐ விசாரணை அதிகாரிகள் முன் உறுதிமொழி வாக்குமூலம் அளித்தனர்.
தற்போதும் சிபிஐ குற்றம் சாட்டப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மூத்த அதிகாரிகள் 6 பேர் வழக்கு மற்றும் மேல் விசாரணைகளை எதிர்கொள்கின்றனர்.
கல்லூரிகள் மீதான விசாரணைகள், அவர்களுக்குள் இருந்த முந்தைய தொடர்பு மற்றும் செயல்பாடுகளை வெளிப்படுத்தும். பல வலிமை மிக்கவர்களின் பெயர்கள் வீழ்ச்சியடையும்.
மாணவர் சேர்க்கையில் அன்றைய மேற்பார்வை அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டோராக வைக்கப்படாவிட்டாலும் கூட, கல்லூரிகளை மேற்பார்வையிட்டவர்கள் யார்? மாணவர்களுக்கு நியாயமான இடத்தைப் பெற்றுத் தருவது யாருடைய பொறுப்பு?
தொடர்ந்து மிரட்டிப் பணம் பறித்தல் அனைத்தையும் மருத்துவக் கல்லூரிகள் எவ்வாறு செய்ய முடியும்?
விசாரணை அமைப்பு ஆதாரங்களைப் பெறாவிட்டாலும், மூத்த கண்காணிப்புப் பதவிகளில் இருந்தோரின் அலட்சியம் புலப்படுகிறதே.
நீதிக்கான போராட்டம் மதிப்புக்குரியது என்று நான் கருதுகிறேன்".
இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT