Published : 18 Feb 2020 01:26 PM
Last Updated : 18 Feb 2020 01:26 PM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் 7 பேரை விடுதலை செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் வாயில் அருகே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை வழக்கறிஞர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிரதான வாயில் அருகே இன்று (பிப்.18) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஜான் வின்சென்ட் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேருக்கும் தொடர்பு இல்லை. இவர்கள் வழக்கில் பொய்யாகச் சேர்க்கப்பட்டவர்கள் என விசாரணை அதிகாரிகள், நீதிபதிகள் பலர் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு உண்மையிலேயே தொடர்பு இருந்தாலும் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது. இதனால் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருகிறார். இதைக் கண்டிக்கிறோம். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 161-ன் கீழ் ஆளுநர் தனது உரிமையைப் பயன்படுத்தி உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும். இல்லையெனில் தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று ஜான் வின்சென்ட் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் ஹென்றி டிபேன், வாஞ்சிநாதன், அருணாசலம், ராமமூர்த்தி, வில்லவன்கோதை, ராபர்ட் பயாஸ், ராஜன், பினேகாஸ், எழிலரசு, அகராதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்கள் தமிழக அமைச்சரவைத் தீர்மானத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும், தமிழக அரசு மாநில இறையாண்மையையும் உரிமையையும் நிலைநாட்ட வேண்டும், மாநில அரசின் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
தவறவிடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT