Published : 18 Feb 2020 11:32 AM
Last Updated : 18 Feb 2020 11:32 AM

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் கே.என் நேரு உள்ளிட்ட திமுகவினருக்குத் தொடர்பு: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

கே.என்.நேரு, அமைச்சர் ஜெயக்குமார் | கோப்புப் படம்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் கே.என்.நேரு உள்ளிட்ட திமுகவினர் விரைவில் சிக்குவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சிங்காரவேலரின் 161-வது பிறந்த நாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பாண்டியராஜன், சரோஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், சட்டப்பேரவையில் நேற்று பேசியபோது திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தொடர்பிருப்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துப் பேசியதாவது:

“2006- 2011 காலகட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடந்திருக்கிறது. இதில் கே.என்.நேரு, அந்தியூர் செல்வராஜ், மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்குத் தொடர்பிருக்கிறது. அவர்களின் பரிந்துரைக் கடிதங்கள், முறைகேடு தொடர்பான சோதனையின்போது அப்போதைய டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து வீட்டில் சிக்கியிருக்கிறது.

இதுகுறித்து 2010-ல் கே.என்.நேருவின் அலுவலக முத்திரையோடு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. வீரபாண்டி ஆறுமுகம் மறைந்துவிட்டார். ஆனால் இவர்கள் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அடுத்த மாதம் 19-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது உண்மைகள் அனைத்தும் வெளிவரும். அப்போது பரிந்துரைக் கடிதம் கொடுத்தவர்கள் கண்டிப்பாக சிக்குவார்கள்.

என்பிஆர் கொண்டு வந்ததே திமுகதான். திமுகவும் காங்கிரஸும் கொண்டு வந்தன. அதை இப்போது நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளனர். அதற்கு எதிராகப் போராட்டம் நடத்த ஜனநாயக நாட்டில் அவரவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் முதல்வர் சட்டப்பேரவையிலும் ஜமாத் பெரியவர்களையும் சந்தித்தபோது தெளிவுபடுத்தியுள்ளார். இஸ்லாமியர்களுக்கு எப்போதும் அரசு துணை நிற்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியின் அவதூறு கருத்து திமுகவின் பண்பைக் காட்டுகிறது''.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x