Published : 31 Aug 2015 12:21 PM
Last Updated : 31 Aug 2015 12:21 PM
விருதுக்காக வழிமேல் விழி வைத்து ஏக்கத்துடன் காத்தி ருப்பவர்களின் பட்டியல் இசை உலகில் நீளமானது! இந்த லிஸ்டில் இணையாமல், யாராவது விருது கொடுக்க முன்வந்தால்கூட புறமுதுகு காட்டி ஓடும் ஒரு சிலரில் குறிப்பிடத்தக்கவர் மிருதங்க மேதை குரு காரைக்குடி மணி. விருதுக்கு இவரை சம்மதிக்க வைப்பது, தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பதுபோல! கிருஷ்ண கான சபாவின் செயலர் ஒய்.பிரபு இதை சாத்தியமாக்கியிருக்கிறார்.
கடந்த சனிக்கிழமையன்று காரைக்குடியாருக்கு 70-வது பிறந்த நாள். அன்றைய தினம் அவருக்கு சபாவின் வைர விழா சிறப்பு விருது வழங்கப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத் தொகையும் உண்டு! காசோலையை சபாவிடமே திருப் பிக் கொடுத்துவிட்டார் மணி. சபா வில் ஒவ்வொரு வருடமும் வாசிக் கும் மிருதங்கக் கலைஞர்களில் (வயது வரம்பு 25) சிறப்பாக வாசிக் கும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, இதிலிருந்து வரும் தொகையை அளி்க்கும்படி கேட்டுக் கொண்டார்.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் உள்ள காரைக்குடி மணியின் சீடர்களில் ஒரு சிலர் விழாவில், குருவுக்கு காணிக்கையாக ஏழு லட்சம் ரூபாய் கொடுத்தார்கள். (70 வயது என்பதால் 7 லட்சம்.) ஆக, ‘மணி’யான விழா!
விழாவுக்குத் தலைமை வகித்து, விருது வழங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தனது ஏற்புரையில் காரைக்குடி மணியின் சாதனை களுக்கு லிஸ்ட் கொடுத்தார். தனது 18-வது வயதில் அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனிடம் மணி தேசிய விருது வாங்கியது, தனது 54-வது வயதில் அப்போதைய குடி யரசுத் தலைவர் கே.ஆர்.நாராய ணனிடம் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றது… இப்படி அடுக் கிக்கொண்டே போனார் ஜி.கே.வாசன். ஒரு கட்டத்தில் வாய் தவறி, காரைக்குடி மணியை பாலக்காடு மணி என்று விளித்தார். என்ன செய்ய? மிருதங்கம் என்றாலே மேதை பாலக்காடு மணி ஐயரின் பெயர் தவிர்க்க இல்லாத ஒன்றா யிற்றே! அது சரி, விருது என்றாலே காரைக்குடி மணிக்கு கசப்பது ஏன்? அவரின் ஏற்புரையில் விடை கிடைத்தது.
பாலக்காடு மணி ஐயர் ரிஷிவந் தியத்தில் தங்கியிருந்த நேரம் அது. பாபு என்கிற ஆத்ம நண்பர் அவரைச் சந்திக்க சென்றிருக்கிறார். ‘‘என்னுடைய பாணி, பழநி சுப்ரமண்ய பிள்ளை பாணி. அதுமாதிரி தன்னோட சொந்த பாணில காரைக்குடி மணின்னு ஒரு பையன் வாசிக்கிறான். அவன் நன்னா முன்னுக்கு வருவான்..’’ என்று பாபுவிடம் வாழ்த்திப் பேசியிருக்கிறார் மணி ஐயர்.
‘‘இதை கலங்கிய கண்களுடன் பாபு என்னிடம் தெரிவித்தார். மிருதங் கத்தில் அல்டிமேட் என்றால் அது மணி ஐயர்தான்... அவர் யாரையும் எளிதில் வாழ்த்திவிடமாட்டார். அப்பேர்ப்பட்டவர் என்னைப் பாராட்டியிருக்கிறார். அதைவிட வேறு என்ன பெரிய விருது இருக்க முடியும்?’’ என்று காரைக்குடி மணி சொன்னபோது குரல் கரகரத்தது.
காரைக்குடியில் தனது 6-வது வயதில் பித்துக்குளி முருகதாஸ் கச்சேரியில் வாசித்தது, மணிக்கு முதல் கச்சேரி. எம்.எஸ்., எம்எல்வி, டிகேபி உள்ளிட்ட பெரிய பெரிய ஜாம்பவான்களுக்கெல்லாம் பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்து, அவர்களிடமிருந்து நிறைய கற்றும், பெற்றும் வாசிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார். கச்சேரி களில் காரைக்குடி மணி தனி ஆவர்த் தனம் வாசிக்கும்போது, ஒருவர் கூட எழுந்து வெளிநடப்பு செய்வ தில்லை என்பது அவரின் திறமைக் கும், ஆளுமைக்கும் சான்று.
உலகம் முழுவதும் நிறைய சீடர்களைத் தயாரித்து வருகிறார் காரைக்குடி மணி. இவரிடம் கற்காமல் இவரை மானசீக குருவாகக் கொண்டு மிருதங்கம் வாசித்துவருபவர்கள் நிறைய பேர்.
கடும் உழைப்பாளி.. அசுர சாதகி.. என்றெல்லாம் புகழப்படுகிறார்.
‘‘என் உழைப்புக்கு இன்ஸ்பிரே ஷனாக விளங்கியவர் உமையாள் புரம் சிவராமன் சார். நாட்டு சுப்பராய முதலி தெருவில் இருந்த போது, தினமும் காலை முதல் மாலை வரை வாசித்துக் கொண்டே இருப்பார் என்று கேள்விப்பட்டிருக் கிறேன். நானும் பார்த்திருக்கிறேன். நானும் என் அம்மாவிடம்கூட பேசாமல் நாள் முழுக்க மிருதங்கம் வாசித்துப் பழகியதற்கு அவர்தான் காரணம்’’ என்று ஏற்புரையில் மணி சொன்ன வார்த்தைகள் பலரின் புருவங்களை உயர்த்தியது உண்மை! பின்னே? இந்த காலத்தில் எந்த வித்வான் தனது சமகால சீனியருக்கு மனம்திறந்து நன்றி சொல்கிறார்?! (அன்று முன்வரிசையில் சிவராமன் ஆஜர்!)
இளைஞர் அபிஷேக் ரகுராம் மிக நன்றாகப் பாடக்கூடியவர், கஞ்சிரா வாசிப்பார் என்பது ஊர் ஒப்புக்கொண்ட விஷயம். மிருதங்க வாசிப்பிலும் கில்லி என்பதை மேற்படி விழாவில் நிரூபித்தார் ரகுராம். அனந்தா ஆர்.கிருஷ்ண னுடன் சேர்ந்து வாசித்த ‘லயவின் யாச சமர்ப்பணம்’ நிகழ்வில் அரை மணி நேரத்துக்கு தூள்கிளப்பி னார்கள். இளைஞர்கள் இருவரும், மறைந்த மிருதங்க வித்வான் பாலக்காடு ரகுவின் பேரன்கள். அன்றைய லயவின்யாசத்துக்கு இருவருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்தது, காரைக்குடி மணியின் சொற்களும், கோர்வைகளும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT