Published : 18 Feb 2020 09:57 AM
Last Updated : 18 Feb 2020 09:57 AM
கண்வலி செடியை அங்கீகரிக்கப்பட்ட பயிராக தமிழக அரசு அறிவிக்க வேண்டு மென, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கண்வலி விதை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர், தாராபுரம், திண்டுக்கல் மற்றும் ஒட்டன் சத்திரம் பகுதிகளில் தோட்டக்கலைப் பயிராக செங்காந்தள் எனும் கண்வலி விதை சாகுபடி, சுமார் 6000 ஏக்கர் பரப்பில்பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது மூலனூர், தாராபுரம் வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் கண்வலி விதை அறுவடை பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். பெரும்பான்மை சாகுபடி பரப்பின் அறுவடை முடிவடையும் நிலையில் உள்ளது.
அலோபதி உள்ளிட்ட மருத்துவத்தில் மருந்துகள் தயாரிக்க, முக்கிய மூலப்பொருளாக விளங்கும் கண்வலி விதைகளை உற்பத்தி செய்ய, ஏக்கருக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதுதொடர்பாக கண்வலி செடி விவசாயிகள் கூறியதாவது: கண்வலி செடி என்றழைக்கப்படும் செங்காந்தள் சாகுபடியை, தமிழக அரசு அங்கீகரிக்கப்பட்ட பயிராக அறிவித்து, குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டுமென, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கண்வலி விதையில், மருந்துகள் தயாரிப்பில் மூலப்பொருளான கோல்சிசின் அதிகம் இருப்பதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்வலி விதை கிலோரூ.4 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப் பட்டது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால், விவசாயிகளுக்கு பூக்கள் உதிர்வு, உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில், கண்வலி விதை கிலோ ரூ.2000-க்கு இடைத்தரகர்கள் விலை நிர்ணயம் செய்திருப்பதால், நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும், இடைத்தரகர்களின் பொய்யான தகவல்களை, அவதூறுகளை நம்பவேண்டாம். விவசாயிகள் பொறுமை காத்து, விதைகளை இருப்பு வைத்து நல்லவிலை கிடைக்கும்போது விற்க வேண்டும். நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு நல்லவிலை கிடைக்கும். ஆகவே இடைத்தரகர்களை யாரும் நம்ப வேண்டாம்' என்றனர்.
இதுதொடர்பாக கண்வலி விதை விவசாயிகள் சங்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் பழ.ரகுபதி கூறியவது: மத்திய அரசு கண்வலி சாகுபடியை, செங்காந்தளை மருத்துவக் குணம் கொண்ட தாவரப் பட்டியலில் கடந்த மாதம் சேர்த்துள்ளது.
இதன்மூலமாக, மத்திய அரசின் மானியத் திட்டங்கள் விவசாயிகளுக்கு கிடைக்கும். ஆனால், தமிழக அரசு இதுவரை கண்வலி செடியை அங்கீகரிக் கப்பட்ட பயிராக அறிவிக்கவில்லை. வகைப்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்காமலும் இருப்பதால், விவசாயிகள் பொருளீட்டுக் கடன் பெறுவதில் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
கண்வலி செடி எனும் செங்காந்தள் சாகுபடியை, தமிழக அரசு விரைவாக அங்கீகரிக்கப்பட்ட பயிராக அறிவிப்பதோடு, ஆண்டுதோறும் குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT