Published : 18 Feb 2020 09:53 AM
Last Updated : 18 Feb 2020 09:53 AM

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் தர தயங்குகின்றனவா திருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிப்பு?

திருப்பூர்

தேசியமயமாக்கப்பட்ட வங்கி கள் கடன் தர தயங்குவதால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, திருப்பூர்தொழில்துறையினர் வேதனை அடைந்துள்ளனர். தொழில் செய்பவர் வரவு மற்றும் செலவை முறையாக பாரமரித்திருந்தால், அவர்க ளுக்கு இயல்பாகவே வங்கிகளில் கடன் கிடைத்துவிடும் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2019 முடிந்த காலாண் டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வெளியிட்டுள்ள தணிக்கை செய்யப்படாத வரவு செலவு இருப்புநிலையில் (Balance Sheet) வாராக்கடன்கள் அளவுகள் ஓரளவு குறைந்துள்ளன. சில வங்கிகள் லாபம் ஈட்டியுள்ளன. பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலாக்கத்தின் தாக்கம் சிறு, குறு நடுத்தர தொழில்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக் கிய நிலையில், வங்கிகளின் பாராமுகமும் நிலைமையை மேலும் மோசம டைய செய்ய உண்மைக்காரணம், என திருப்பூர் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளர் குமார் துரைசாமி கூறியதாவது:

முன்னெப்போதும் இல்லாத அளவில், வங்கி நடைமுறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள், உதாரணமாக பேசல்-3 நிய மங்கள் (Basel-3), மதிப்பீடு முறைகள் (Extrernal Rating), கடன்காலக்கெடு சுருக்கம், கண்கா ணிப்பு மற்றும் விசாரணை ஆணையங்களின் நடவடிக்கை, மென்பொருள் மாற்றங்கள் (Software Changes ),பல வங்கிகள் தடுப்பு மற்றும் சரிப்படுத்தும் (PCA - Preventive and Correction) வரையறைக்குள் கொண்டு செல்லப்பட்டு, கிளை மேலாளர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த நெருக்கடிகள் வங்கி அதிகாரி கள் மற்றும் ஊழியர்களின் மத்தியில் ஒரு விதமான மனச்சோர்வை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை அந்த நிலை தொடர்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு வங்கி பணிகளுக்கு பெரிய அளவு நியமனங்கள், அதிகாரிகள் அளவில் நடைபெறவில்லை. 30 முதல் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்ற அதிகாரிகள், ஓய்வு பெற்றும் பெறும் நிலையிலும் உள்ளனர். புதிதாக பொறுப்புக்கு வரும் இளம்வயது அதிகாரிகளுக்கு அனுபவக் குறைவு, முடிவெடுப் பதில் குழப்பம் என திருப்பூர் போன்ற நகரங்களில் தொழில் துறை பின்னடைவுக்கு பல்வேறு காரணங்களாக உள்ளன என்றார்.

திருப்பூர் தொழில்துறையினர் சிலர் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மாதாந்திர பதிவுகள் எளிதாக நிறுவனங்களின் வர்த்தகத்தை மதிப்பீடு செய்ய உதவும். கட்டமைக்கப்பட்ட பாலன்ஸ் ஷீட்டுகளை கொண்டு இனி கடன் வாங்க இயலாது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்புக்கு உதவும் உத்தரவை மேலும் ஓர் ஆண்டு மத்திய அரசு நீட்டித்துள்ளது, இதை கருத்தில்கொண்டு உள்ளப டியே வர்த்தக வாய்ப்புகள் உள்ள நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளநிறுவனங்கள் தத்தமது வங்கிகளை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து சரிவிலிருக்கும் தொழிலை மீட்டெடுக்கலாம். ரூ.4000 கோடி ஒரு நிறுவனத்துக்கு அளித்து அது வாராக்கடனாக மாறுவதை தவிர்த்து, அதே தொகையை 2000 முதல் 2500 சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கி னால் வளர்ச்சியை நோக்கி பயணிக் கலாம். இதில் 10 சதவீத நிறுவனம் சரியாக செயல்படாவிட்டாலும் வாராக்கடனின் அளவுகள் மிக மிக குறைவாகவே இருக்கும். வேலை இழப்புகளும் குறைவாகவே இருக்கும் என்றனர்.

கிரெடிட் ஸ்கோர் முக்கியம்

திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நா.சத்தியமூர்த்தி ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

டிசம்பர் 2019 வரை, திருப்பூர் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ. 11120 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மொத்தக் கடன் ரூ. 31660 கோடி. கடன் பாக்கி 35 சதவீதம் ஆகும். அதேபோல் மார்ச் 2019 வரை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 10770 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மொத்த கடன் ரூ. 30412 கோடி. கடன் பாக்கி சுமார் 40 சதவீதம் ஆகும்.

கோவை மாவட்டத்தைவிட, திருப்பூர் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் அதிகமாக வழங்கி உள்ளோம். தொழில் செய்பவர் வரவு மற்றும் செலவை முறையாக பராமரித்திருந்தால், அவர்களுக்கு இயல்பாகவே வங்கிகளில் கடன் கிடைத்துவிடும். கடன் பெற்ற பிறகு அந்த கடனை அடைக்கும் தவணைகள் எனப்படும் கிரெடிட் ஸ்கோரும் கணக்கில் கொள்ளப்பட்டு தான், மறுமுறை கடன் வழங்கப்படுகிறது. இணைய வழி கடன் சேவை அதிகரித்திருப்பதால், தற்போது கிரெடிட் ஸ்கோர் முக்கிய விஷயமாக மாறி உள்ளது. தற்போது வங்கிகளில் தேவையான ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து நியமிக்கப்படுகிறார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x