Published : 18 Feb 2020 07:46 AM
Last Updated : 18 Feb 2020 07:46 AM
தமிழக முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் 3 ஆண்டு சாதனை மலர்,காலப்பேழை புத்தகம் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன.
தமிழக முதல்வராக பழனிசாமி கடந்த 2017 பிப்ரவரி 16-ம் தேதி பொறுப்பேற்றார். தற்போது 3 ஆண்டு நிறைவடைந்து, 4-ம்ஆண்டில் தமிழக அரசு அடியெடுத்து வைத்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் நீர்நிலைகளை பாதுகாக்க குடிமராமத்து திட்டம், 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், நிர்வாக வசதிக்காக 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கியது, வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டது மூலம் ரூ.8,835 கோடி முதலீடுகளை ஈர்த்தது, 2 கோடியே 5 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கம், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது உட்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக அரசின் மக்கள்நலத் திட்டங்களை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசின் 3 ஆண்டு நிறைவை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறை தயாரித்துள்ள ‘முத்திரை பதித்த மூன்றாண்டு.. முதலிடமே அதற்கு சான்று’ என்ற 3 ஆண்டு சாதனை மலர், சட்டப்பேரவை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஆற்றிய உரைகள், பேரவையில் 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தொகுப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட, துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, மாவட்ட வாரியாக தொகுக்கப்பட்ட தமிழக அரசின் 3 ஆண்டு சாதனை, முதல்வர் உரையில் இருந்து தொகுக்கப்பட்ட கருத்துரைகள், சாதனை குறும்படங்களின் குறுந்தகட்டை முதல்வர் வெளியிட, செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பெற்றுக்கொண்டார். காலப்பேழை புத்தகத்தை முதல்வர் வெளியிட தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநர் பொ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT